தெலுங்கானா... 60 ஆண்டுகால 'யுத்த' பாதை
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உதயமாகிவிட்டது.. இந்த கோரிக்கை ஏதோ சில பத்தாண்டுகளில் உருவானது.. நாடு விடுதலை அடைந்த காலம் தொட்டே நாட்டை உலுக்கி வரும் கோரிக்கை.
நாடு விடுதலை அடைந்த போது தெலுங்கானா தனி பிரதேசமாக ஹைதராபாத்துடன் இணைந்திருந்தது. எஞ்சிய ஆந்திர பகுதிகள் சென்னை மாகாணத்துடன் இருந்தன. பின்னர் தனி ஆந்திர மாநில கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கையை முன்வைத்து பொட்டி ஸ்ரீராமுலு காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். இந்த போர்க்களத்தில் அவர் உயிரையும் இழந்தார். அப்படி உருவான ஆந்திர பிரதேசம், சில ஆண்டுகாலத்திலேயே தனி தெலுங்கானா கோரிக்கையை எதிர்கொள்ள நேரிட்டது.
60 ஆண்டுகால தெலுங்கானா கோரிக்கை கடந்து வந்த பாதை...

ஹைதராபாத்துடன் இணைப்பு
ஒருங்கிணைந்த ஹைதராபாத் மாநிலத்துக்குள் தெலுங்கானா பிரதேசம் 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி இணைக்கப்பட்டது.

ஹைதராபாத் முதல்வர்
ஹைதராபாத் மாநில முதல் முதல்வராக 1950 ஜனவரி 26-ந் தேதி எம்.கே. வெள்ளோடியை மத்திய அரசு நியமித்தது. இந்த மாநிலத்துக்கு 1952-ல் முதல் முறையாக நடைபெற்ற தேர்தலில் ராமகிருஷ்ண ராவ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனி ஆந்திரா மாநிலம்
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 1953 நவம்பர் 1-ந் தேதி மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது, ஆந்திர தலைநகராக கர்நூல் இருந்தது. ஆந்திரம் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு, 53 நாள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.

ஆந்திராவுடன் ஹைதராபாத் இணைக்க முடிவு
1953-ல் ஆந்திர மாநிலத்துடன் ஹைதராபாத் மாநிலத்தை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஹைதராபாத் மாநில முதல்வர் பர்குல ராமகிருஷ்ண ராவ் ஆதரவு தெரிவித்தார். ஆனால் தெலுங்கானா பிரதேச மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆந்திரா- ஹைதராபாத் இணைந்தன
1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி ஆந்திராவுடன், ஹைதராபாத் மாநிலத்தை இணைக்கும் ஒப்பந்தத்தில் பர்குல ராமகிருஷ்ண ராவும், பெஷவாட கோபால ரெட்டி ஆகியோரும் கையெழுத்திட்டனர். அப்போது தெலுங்கானா பிரதேச மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1956 நவம்பர் 1-ல் ஆந்திர மாநிலத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது. ஆந்திர மாநில தலைநகராக ஹைதராபாத் மாற்றப்பட்டது.

தெலுங்கானா இயக்கம்
மரி சென்னா ரெட்டி என்பவரால் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பிரஜா சமிதி என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. உறுதி அளித்தபடி தெலங்கானா பகுதி மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை என்று கூறி 1969-ல் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 300 மாணவர்கள் பலியாகினர்.

இந்திரா- தெலுங்கானா தலைவர்கள் பேச்சுவார்த்தை
இந்த பெரும் கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா காந்தி 1969 ஏப்ரல் 12-ந் தேதி ஆந்திராவுக்கு வருகை தந்து, தெலுங்கானா தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அவரது திட்டத்தை ஏற்றுக்கொள்ள தெலங்கானா தலைவர்கள் மறுத்துவிட்டதால் போராட்டம் நீடித்தது.

ஜெய் ஆந்திரா தொடக்கம்
தெலுங்கானா கோரிக்கைக்கு எதிராக 1972-ல் ஜெய் ஆந்திரா அமைப்பு ஆந்திர- ராயலசீமா பகுதியில் தொடங்கப்பட்டது.

99-ல் உயிர் பெற்ற தெலுங்கானா
1999ஆம் ஆண்டு வரை தனி மாநில கோரிக்கை கிடப்பில் போடப்பட்டிருந்தது. அப்போது இதற்கு மீண்டும் உயிர் கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான். அமைச்சரவையில் இடம் தராததால் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து பிரிந்து சென்று 2001 ஏப்ரல் 27-ல் சந்திரசேகர ராவ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைத் தொடங்கினார்.

விஸ்வரூபம் எடுத்த தெலுங்கானா
2004- தேர்தலின்போது தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படும் என்று கூறி டி.ஆர்.எஸ் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்றது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் 2006-ல் மத்தியிலும் மாநிலத்திலும் அமைச்சரவையில் இருந்து டி.ஆர்.எஸ் வெளியேறி தனியாகப் போராடத் தொடங்கியது.

காலவரையற்ற உண்ணாவிரதம்
2009 நவம்பர் 29-ல் டி.ஆர்.எஸ் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. டிசம்பர் 9-ல் மத்திய அரசு தெலுங்கானா கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தது. டிசம்பர் 23-ல் இந்தக் கோரிக்கை கிடப்பில் போடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன்
தெலுங்கானா தொடர்பாக 2010 பிப்ரவரி 3-ந் தேதி முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 5 பேர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை டிசம்பர் 30-ல் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.

வெடித்த போராட்டங்கள்
2011-12-ல், தெலங்கானா பகுதியில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்த போராட்டம் என தொடர்ந்தது. எம்.எல்.ஏக்கள் பலர் கோரிக்கையை வலியுறுத்தி பதவியை ராஜினாமா செய்தனர்.

அனைத்து கட்சிக் கூட்டம்
தெலுங்கானா கோரிக்கை பற்றி இறுதி முடிவு எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் 2012 டிசம்பர் 28-ல் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.

ஒப்புதல்
இறுதியாக டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.












Click it and Unblock the Notifications