தா.கி. கொலை வழக்கு- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க. அழகிரி உள்ளிட்டோரை விடுவித்து ஆந்திரா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தா.கி. கொலை வழக்கு
தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கடந்த 2003ஆம் ஆண்டு மதுரையில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் உள்பட 13 பேர் மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரி அரசுத் தரப்பில் 14வது சாட்சியான வில்லாபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் மற்றும் கிரம்மர் சுரேஷ் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்து தா.கிருட்டிணன் கொலை வழக்கின் விசாரணையை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட செசன்சு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2007ம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை அங்கு தொடர்ந்து நடைபெற்றது.

அழகிரி விடுதலை
இந்த வழக்கில் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 8ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீதும் கூறப்பட்ட குற்றச்சாட்டு, நிரூபிக்கப்படவில்லை. இதனால் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துர்காபிரசாத் தீர்ப்பளித்தார்.

தற்போது மேல்முறையீடு
தீர்ப்பு அளிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பின் ஆந்திர மாநிலம், சித்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

உள்துறை செயலர் அறிக்கை
இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்ட உத்தரவில், தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சித்தூர் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அதற்கு போதிய காரணங்கள் இருக்கிறது என்றும் தமிழக அட்வகேட் ஜெனரல் அரசுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அதனை அரசு கவனமான பரிசீலித்து கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பிக்கிறது.

சிறப்பு விடுப்பு மனு
இந்த வழக்கில் தாமதத்தை கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு (எஸ்.எல்.பி.)தாக்கல் செய்யலாம். இந்த வழக்கில் மாநில அரசு சார்பில் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக அவர் விரும்பும் மூத்த வழக்கறிஞரின் உதவியை பெற்றுக்கொள்ளலாம்.

3 வழக்கறிஞர்களுக்கு அனுமதி
அட்வகேட் ஜெனரலுக்கு உதவுவதற்கு அரசு வழக்கறிஞர்கள் எம்.தமிழ்செல்வன், வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன், கே.பி.ஆனந்தகிருஷ்ணா ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்வது மற்றும் இவ்வழக்கு தொடர்பான அனைத்து உதவிகளையும் அட்வகேட் ஜெனரலுக்கு அளிப்பதற்காக 3 அரசு வழக்கறிஞர்களுக்கும் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் விதிமுறைப்படி நிர்ணயிக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக 3 அரசு வழக்கறிஞர்களும் இந்தியாவின் எந்தப்பகுதிக்கும் பயணம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications