பேரறிவாளனுக்கு மருத்துவ ஆவணங்கள்.. சிறைத்துறைக்கு தகவல் ஆணையர் உத்தரவு!

ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் தங்களது கருணை மனுவை காலதாமதமாக ஜனாதிபதி நிராகரித்ததால் தூக்கை ரத்து செய்யக் கோரி பேரறிவாளவன் உள்ளிட்ட மூவரும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு பேரறிவாளன் கடிதம் அனுப்பியிருந்தார்.
வீடியோ கான்ஃபரன்சிங் விசாரணை
இக் கடிதம் மீதான விசாரணையை சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணைய மைய அலுவலகத்தில் இருந்து தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நேற்று நடத்தினார்.
பேரறிவாளன் ஆஜர்
இதனால் வேலூர் மத்தியச் சிறையில் உள்ள பேரறிவாளன் சிறைக்குள் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன் வேலூர் மத்தியச் சிறை கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் இருந்தார்.
மருத்துவ ஆவணங்கள்
தமது உடல்நிலை குறித்த மருத்துவ ஆவணங்கள் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று பேரறிவாளன் தகவல் ஆணையரிடம் கேட்டுக் கொண்டார். உடன் இருந்த சிறைத் துறை அதிகாரி கிருஷ்ணகுமாரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அவர் உரிய பதில் அளிக்கவில்லை.
15 நாட்களில் ஒப்படைக்க உத்தரவு
இதைத் தொடர்ந்து பேரறிவாளவனின் உடல்நிலை தொடர்பான மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று தகவல் ஆணையர் சிறைத் துறை அதிகாரி கிருஷ்ணகுமாருக்கு உத்தரவிட்டார்.
ஆராய்ச்சியாளருக்கு அனுமதி மறுப்பு ஏன்?
இதேபோல் லீனா மேரி ஜார்ஜ் என்ற ஆராய்ச்சியாளர் தம்மை சந்தித்து பேட்டி எடுக்க அனுமதி மறுத்தது ஏன் என்பது தொடர்பாகவும் பேரறிவாளன் கேள்வி எழுப்பினார்.
கருணை மனுக்கள் தொடர்பாக..
மேலும் 1999ஆம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி முதல் தமது கருணை மனுமீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள், மனுவை ஜனாதிபதி நிரகாரித்ததற்கான காரணம், ஆகியவவற்றையும் பேரறிவாளன் கோரியிருந்தார்.
மீண்டும் வீடியோ கான்ஃபரன்சிங்
பேரறிவாளன் கோரிய இந்த ஆவணங்கள் தொடர்பாக மீண்டும் ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் பேட்டி நடைபெறக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications