நவநீதம் பிள்ளையிடம் கதறிய திருகோணமலை தமிழர்கள்.. இன்று ராஜபக்சேவுடன் சந்திப்பு
திருகோணமலை: இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தலைமையிலான குழுவினரிடம் திருகோணமலை வாழ் தமிழர்கள் தங்களது வாழ்விடத்தை மீட்டுத் தரக்கோரி கதறலுடன் மனு கொடுத்தனர். இன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை நவநீதம் பிள்ளை சந்தித்துப் பேச இருக்கிறார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, கொழும்பில் இலங்கை அமைச்சர்கள் ஹக்கீம், வாசுதேவ நாணயக்கார ஆகியோருடனும் மக்கள் இயக்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் சென்றார்.
யாழ்ப்பாணத்தில் மனித உரிமை நிலைமைகளைக் கேட்டறிந்தார். விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் மனைவி உள்ளிட்டோர் நவநீதம்பிள்ளையை சந்தித்துப் பேசினர்.

முள்ளிவாய்க்காலில்..
இதைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக இறுதிப் போர்க்களமாக இருந்த முள்ளிவாய்க்கால், நந்தி கடல், புதுமாத்தளன் ஆகிய இடங்களுக்கும் நவநீதம் பிள்ளை சென்றார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் இலங்கை ராணுவத்தினர் சீருடை இல்லாமல் சாதாரண உடைகளில் பொதுமக்களுடன் கலந்து நின்றனர்.

புலிகளின் ஓடுபாதையில் இருந்து..
பின்னர் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய இரணைமடு விமான ஓடுபாதையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருகோணமலையின் சீனகுடாவுக்கு நவநீதம்பிள்ளை புறப்பட்டு சென்றார்..

தமிழர்கள் கதறல்..
திருகோணமலையில் சொந்த வாழ்விடங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் நூற்றுக்கணக்கானோர் தங்களது குமுறலை கதறலுடன் நவநீதம்பிள்ளையிடம் தெரிவித்தனர்.

இன்று ராஜபக்சேவுடன் சந்திப்பு
இதைத் தொடர்ந்து கொழும்பு திரும்பியிருக்கும் நவநீதம்பிள்ளை இன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின் போது காணாமல் போனோர் விவகாரம் உள்ளிட்ட தமிழர் பிரச்சனை குறித்து அவர் பேச இருக்கிறார்.












Click it and Unblock the Notifications