அரெஸ்டாகிறார் அசாராம் பாபு? ஆசிரமத்திற்குள் போலீஸ் நுழைந்தது! உதவியாளர் சரண்!!
ஜோத்பூர்: பாலியல் புகாரில் சிக்கிய அஸ்ரம் பாபுவின் இந்தூர் ஆசிரமத்திற்குள் போலீசார் நுழைந்தபோது சாமியாரின் உதவியாளர் போலீசில் சரணடைந்தார். அஸ்ரம் பாபுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால அவர் குணமடைந்தவுடன் போலீசின் விசாரணைக்கு வருவார் என்று அசாராம் மகன் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை அலுவலகங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் 'அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்' என அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவர் டெல்லி போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, ஜோத்பூர் போலீசார் நேரில் ஆஜராகும்படி அஸ்ரம் பாபுவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆஜர் ஆவதற்கு கடைசி நாளான நேற்று அஸ்ரம் பாபு போலீசில் ஆஜராகவில்லை. ஆனால் அஸ்ரம் பாபு சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம் அஸ்ரம் பாபுவை கைது செய்வதில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக குற்றம் சாட்டு எழுந்தது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என தங்களுக்கு தெரியவில்லை என்றும், அவரை பிடிக்க பல இடங்களுக்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அஸ்ரம் பாபு, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஆசிரமத்திற்குள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக போலீஸ் படை ஒன்று உள்ளே புகுந்தது அவரை உள்ளே வைத்துக்கொண்டே அவரது ஆதரவாளர்கள் போலீசாருக்கு போக்கு காட்டிக்கொண்டிருந்த நிலையில், போலீசார் அதிரடியாக அவரை தேடி உள்ளே சென்றனர்.

ஆனால் அஸ்ரம் பாபுவுக்கு தற்போது உடல்நிலை சரியில்லை என்றும் அவர் தப்பி ஓட முயற்சிக்கவில்லை என்றும் அவர் குணம்டைந்ததும் போலீசிடம் விசாரணைக்கு வருவார் என்றும் அவரது மகன் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த புகாரில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்ரம் பாபுவின் உதவியாளர் போலீசில் சரணடைந்திருக்கிறார்.
அஸ்ராம் பாபு கைது செய்யப்பட்டவுடன், சாலை மார்க்கமாக ஜோத்பூர் கொண்டுவரப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications