காவிரியில் புதிய அணை: கர்நாடகாவுக்கு ஜெயலலிதா எதிர்ப்பு!

கர்நாடகாவில் அணைகள் நிரம்பி உபரி நீராக காவிரியில் வெளியேற்றப்படும் தண்ணீரினால் மேட்டூர் அணை நிரம்புகிறது. இவ்வாறு உபரிநீராக தமிழகத்திற்கு திருப்பி விடப்படும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அருகே நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்க கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.
இதற்காக மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் உபரிநீரை கர்நாடகம் பயன்படுத்திக் கொள்வதில் காவிரி நடுவர் மன்றத்தில் எந்தவிதத் தடங்கலும் இல்லை. எனவே, மேக்கேதாட்டு அருகே 3 நீர்த்தேக்கங்களைக் கட்டி அங்கு நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அவர் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
மேக்கேதாட்டு நீர்மின் நிலையத்திற்காக காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயலலிதா, இந்த திட்டம் காவிரி ஆணைய இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்படாத புதிய திட்டம் என்றும், எனவே அணை கட்டும் திட்டம் முழுவதும் சட்ட விரோதமானது.
காவிரி படுகையில் அமைக்கப்பட உள்ள நீர்மின் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் செயல்படும் கர்நாடகா அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications