ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு.. ஜேபிசியின் பதவிக் காலம் நீட்டிப்பு
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு நடத்திவரும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவான ஜேபிசியின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் தீர்மானம் நேற்று லோக்சபாவில் நிறைவேறியது.
ஸ்பெக்ட்ரம் தொடர்பான ஜேபிசியில் உறுப்பினராக இருந்த சுதர்சன நாச்சியப்பன் மத்திய இணை அமைச்சரானார். அதிமுக உறுப்பினர் மைத்ரேயனின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் அவர் தேர்வானதும் அவரையும் ராஜ்யசபா நியமன உறுப்பினர் அசோக் கங்குலியையும் ஜேபிசி உறுப்பினர்களாக சேர்க்க நாடாளுமன்றம் கடந்த வாரம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் ஜேபிசி பதவிக் காலம் நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளுடன் முடிவடைவதால் அதை நீட்டிக்கக் கோரும் தீர்மானத்தை அதன் தலைவர் பி.சி. சாக்கோ நேற்று லோக்சபாவில் முன்மொழிந்தார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரித்ததையடுத்து அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக லோக்சபா தலைவர் மீரா குமார் அறிவித்தார்.
2011ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஜேபிசியின் பதவிக் காலம் 6வது முறையாக தற்போது நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications