சட்டம் ஒழுங்கு சரியாகத்தான் இருக்கிறது: புதுவை ஆளுநருக்கு 'ரங்கா' பதில்!
புதுச்சேரி: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகவே இருக்கிறது.. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் ரங்கசாமி நேற்று விளக்கம் அளித்தார்.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை..இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவிக்கப் போகிறேன் என்று ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அதிரடி காட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து புதுவை மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முதல்வர் ரங்கசாமி, புதுவை மாநிலம் அழகான, அமைதியான மாநிலம். ஆன்மிகம் நிறைந்த மாநிலம். இந்த மாநிலம் எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம்.
சட்டம்-ஒழுங்கு சம்மந்தமாக மத்திய அரசுக்கு, புதுவை அரசு அதிகாரிகள் தவறான தகவல்களை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பதை பார்த்தேன். தலைமை செயலாளர், போலீஸ் ஐ.ஜி. ஆகியோர் மத்திய உள்துறை செயலரை சந்தித்து அளித்த தகவல்கள் தவறு என்பது சரியல்ல.அரசுத் துறை எப்போதும் சரியான தகவலையே கொடுக்கும். காவல்துறையில் சில தவறுகள் நடந்து இருக்கலாம். அந்த தவறுகளை திருத்தி கொள்ளவும், தடுக்கவும் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் ஆளுநரிடம் பேசியுள்ளேன். தேவைப்பட்டால் அவர் என்னை அழைத்து பேசியிருக்கலாம். அதோடு என்னையும், தலைமை செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோரையும் அழைத்து கூட்டு கூட்டமும் நடத்தியிருக்கலாம் என்றார் ரங்கசாமி.












Click it and Unblock the Notifications