2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அட்டாக்.. ஐக்கிய அமீரகத்தின் மீது ஹவுத்திகள் தாக்குதல் ஏன்? பின்னணி
அபுதாபி: கடந்த 2 ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தின் மீது ஹவுத்திகள் எவ்வித தாக்குதலும் நடத்தாமல் இருந்த நிலையில், இப்போது மீண்டும் தாக்குதலைத் தொடங்கியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.
ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபி நேற்று ஆளில்லா டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. புதிதாகக் கட்டுப்பட்டு வரும் விமான நிலையம் உள்ளிட்ட 2 இடங்களில் தாக்குதல் நடந்துள்ளது.
முதலில் இது சிறிய மைனர் தாக்குதல் என்றே போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இதில் மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் 2 டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறியுள்ளன.

இந்தியர்கள் பலி
இதில் லாரிகளின் அருகே இருந்த 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஏமனின் ஹவுத்தி இயக்கம் ஈரானுடன் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடல் வழியாக அபுதாபி அருகே வந்து, அங்கிருந்து டிரோன்களை பறக்கவிட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திட்டம் மாற்றம்
இது ஹவுத்தி இயக்கத்தின் தாக்குதல் திட்டம் மாறியுள்ளதையே குறிக்கிறது. ஹவுத்தி இயக்கத்துக்கு ஈரான் ஆதரவு அளித்து வருவது அனைவருக்கும் தெரியும். இவர்களை எதிர்த்துப் போராடும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அமீரகம் இடம் பெற்றுள்ளது. அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாகவே ஹவுத்தி இயக்கத்தினர் மீதான நேரடி தாக்குதலை ஐக்கிய அமீரகம் தவிர்த்தே வருகிறது. இந்தச் சூழலில் தான் 2018க்கு பின்னர் இப்போது ஐக்கிய அமீரகத்தில் மீண்டும் ஹவுத்தியின் டிரோன் தாக்குதல் நடந்துள்ளது.

அமைதி
சவுதியை போல இல்லாமல் ஏமான் நாட்டில் இருந்து ஐக்கிய அமீரகம் சற்று தொலைவில் தான் உள்ளது. சவுதி அரேபியா - ஏமன் நாட்டுடன் எல்லையைப் பகிரும் போதிலும் ஐக்கிய அமீரகம் இதுபோல எல்லையைக் கொண்டிருக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அமீரகத்தின் ஆதரவுடன் இயங்கும் குழுக்கள் ஹவுத்தி மீதான தாக்குதலைத் தவிர்த்து நேரடியாக ஏமன் அரசுடன் மோதியது. இதனால் ஹவுத்திகளும் அமைதியாக இருந்தனர்.

திடீர் மாற்றம்
இருப்பினும், கடந்த சில வாரங்களாக அங்கு நிலைமை மாற தொடங்கியுள்ளது. ஐக்கிய அமீரக ஆதரவுடன் இயங்கும் குழுக்கள் இப்போது மீண்டும் ஹவுத்தி படைகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. தெற்கு ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் குழுக்கள் ஹவுத்திகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஹவுத்திகள் தாக்குதல் பெரும்பாலும் வெற்றியடைந்த நிலையில், இது அவர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கப்பல்
இந்தச் சூழலில் தான் கடந்த ஜன. 2ஆம் தேதி ஐக்கிய அமீரகத்திற்குச் சொந்தமான கப்பல் ஒன்றைப் பிடித்த ஹவுத்திகள், அமீரகம் உடனடியாக ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதலுக்குத் துணை போவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதன் பின்பு இப்போது சில வாரங்களில் இந்தத் தாக்குதலும் நடந்துள்ளது. முன்னதாக ஐக்கிய அமீரகத்தின் மீதான ஹவுத்திகள் தாக்குதல் 2018இல் அதிகமாக இருந்தது. அப்போதும் ஐக்கிய அமீரக படைகள் ஹவுத்திகள் மீதான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

2018இல் நடந்தது
அப்போது நிலைமை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து ஐநா சபை இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டது. மேலும், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் சவுதி மற்றும் ஐக்கிய அமீரகத்தை தனிமைப்படுத்தின. இது ஐக்கிய அமீரகத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ஐக்கிய அமீரகம் தனது தாக்குதலை நிறுத்தியது. ஆனால், இப்போது நிலைமை 2018ஐ போல இல்லை.

இப்போது மாற்றம் ஏன்
ஏனென்றால், 2018இல் ஐக்கிய அமீரகத்தின் படை வீரர்கள் நேரடியாக ஏமனில் இருந்தன. இதனால் தான் சர்வதேச அழுத்தம் அதிகரித்தது. இருப்பினும், இந்த முறை நேரடியாக இல்லாமல், ஐக்கிய அமீரகத்தின் கூட்டணி படைகள், ஆதரவுடன் செயல்படும் குழுக்களும் அதிகம் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எனவே, இந்தச் சூழலை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஐக்கிய அமீரகம் நடவடிக்கை எடுக்கிறது. இதனால் கோபமடைந்த ஹவுத்திகள் தான் பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இந்த 2022இல் இந்த விவகாரத்தில் முக்கிய திருப்புமுனை ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications