இனிமே எந்த பையனுமே லவ் லெட்டரே குடுக்க முடியாது.. உதை பின்னி எடுத்துருவோம்.. நடிகர் தாமு பரபரப்பு
வாழப்பாடி: இனி எந்த பையனும் லவ் லெட்டரே கொடுக்க முடியாது என நடிகர் தாமு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு குழந்தை திருமணங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை போலீஸார் கண்டறிந்தனர்.
இதை தடுக்கும் வகையில் காவல் துறை சார்பில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு சமூகவாழ்வியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாண்புமிகு மாணவி எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதில் மாணவிகளுக்கான சுய ஒழுக்கம், தற்பாதுகாப்பு, தன்நிலை உணர்தல், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதுகுறித்து நடிகர் தாமு கூறியிருப்பதாவது: மாண்புமிகு மாணவி எனும் நிகழ்ச்சியை இதுதான் முதல் முறையாக நடத்தினோம். பெண்களின் முன்னேற்றத்திற்கான பயணம். சேலம் மாவட்ட எஸ்பி அருண் கபிலன், டிஎஸ்பி ஹரி சங்கரி ஆகியோரின் ஏற்பாட்டில் அரசு பள்ளி மாணவிகளுக்கான நிகழ்ச்சி இதுவாகும். மாண்புமிகு மாணவி என்பதில் மாண்பு என்றால் என்ன? மாண்பு மிகுந்து இருப்பது எப்படி?
பெருமைக்குரிய மாணவியாக தனது ஆசிரியர்களை எப்படி போற்றி புகழ வேண்டும்? அவர்களை எப்படி பின்பற்றி நடக்க வேண்டும். பெற்றோர்களை எப்படி அரவணைத்து செல்ல வேண்டும் உள்ளிட்டவை குறித்து இந்த நிகழ்ச்சியில் பேசினோம். ஒவ்வொரு மாணவியும் வணக்கம் செலுத்தி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு மாணவிகள் தயாராக இருக்கிறார்கள் என்றால் அதற்கு கல்வியில் காவல் துறை என்ற தலைப்புதான் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
காவல் துறை கல்வியுடன் கலப்பதற்கு என்னை போன்ற பேச்சாளர்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறது. போலீஸாரின் சீருடையை பார்த்தவுடன் மாணவர்களும் மாணவிகளும் அமைதியாகிவிடுகிறார்கள். இந்த மாணவிகளிடம் இனி எந்த பையனும் லவ் லெட்டர் கொடுக்கவே முடியாது. சத்தியமா மாணவிகளின் பின்னால் கூட வர முடியாது.
அந்தளவுக்கு வீராங்கனைகளாக மாற்றி அனுப்பியுள்ளோம். இதன் பிறகு இவர்கள் எல்லாரும் வீரக் கலைகளில் இறங்கிவிடுவார்கள். அத்தனை எளிதில் இந்த மாணவிகளை யாரும் சீண்டி பார்க்க முடியாது. உதை பின்னி எடுத்துவிடுவார்கள். அது மாதிரியான உற்சாகம் உள்ளே போய் இருக்கிறது. கல்வி, வீரம், செல்வம் ஆகியவற்றில் வளர்ச்சி வந்தால்தான் உங்களை தேடி வருவோர் தானாக வருவர்.
தாய் ஸ்தானத்தில் இருக்கும் நீங்கள்(இந்த மாணவிகள்), இந்த உலகிற்கு மக்களை கொடுக்க நீங்கள், மிகவும் முக்கியமானவர்கள் என்பது அந்த மாணவிகளுக்குள் மிகப்பெரிய உற்சாகமும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஒரு தெய்வப்பிறவியாக இன்றுதான் அவர்கள் பார்த்துள்ளார்கள். இவ்வாறு தாமு பேசியிருந்தார்.
இதுகுறித்து டிஎஸ்பி ஹரிசங்கரி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் காவல் துறை முன்னெடுத்த நிகழ்ச்சிதான் மாண்புமிகு மாணவி. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது பெரும்பாலான குற்றங்களுக்கு முக்கிய காரணங்களாக அந்த பெண்களே உள்ளார்கள். சில சமயம் அவர்களுடைய பெற்றோர்களாகவும் இருக்கிறார்கள். சிந்தனை மாற்றம் என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதை விதைப்பதற்கான முயற்சித்தான் இந்த நிகழ்ச்சி.
பருவமடைந்துவிட்டாலே அந்த பெண் திருமணத்திற்கு தயாரானவள் என்ற எண்ணத்தை மாற்றி ஒவ்வொரு பெண்ணும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தகுதியை அடைந்த பின்னரே திருமணத்திற்கு தயாராகுங்கள் என்ற ஆழமான சிந்தனையை அவர்களுக்கு விதைக்கவே இந்த நிகழ்ச்சி என்றார்.












Click it and Unblock the Notifications