அரியலூரில் அசத்திய பாத்திரக்கடைக்காரர்.. "எனது விழியில் உனது பார்வை".. மணமக்களுக்கு செம மகிழ்ச்சி
அரியலுார்: அரியலூரில் நடந்த திருமணம் இணையத்தில் பலரது பாராட்டையும், வாழ்த்தையும் பெற்று வருகிறது.. அத்துடன், திருமணமான கையோடு மணமக்கள் இருவரும் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளனர். அது என்ன கோரிக்கை?
உடல் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் திகழும், மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து கொண்டிருக்கிறார்கள்.. அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக நிதியுதவி, தொழில் பயிற்சி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இட ஒதுக்கீடு போன்றவற்றை அரசு வழங்கி வருகிறது.

ஒளிமயம்: எனினும், சிலரது தனிப்பட்ட வாழ்க்கை ஒளிமயமாக அமைவதில்லை.. பலரால் திருமண பந்தத்துக்குள்ளேயே நுழைய முடிவதில்லை.. இந்த குறைகளையும், தாராள மனம் கொண்டவர்கள் நொறுக்கி தள்ளி வருகிறார்கள். உடல் குறைபாடுள்ளவர்களை, மனம்விரும்பி பலரும் திருமணம் செய்ய முன்வருவது, பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கடந்த வருடம், கரூர் மாவட்டத்தில் சசிக்குமார் என்ற 40 வயது மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நடந்த திருமணம் மக்களின் பேராதரவையும், வாழ்த்துக்களையும் பெற்றது.. பி.காம் பட்டதாரியான சசிக்குமார், 3½ அடி உயரம் உள்ளார்.. சராசரி மனிதர்களை போல் எந்த வேலையும் செய்ய முடியாது.
மாற்றுத்திறனாளி: இதே உயரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வணிக வரித்துறையில் பணியாற்றி வருவதாக அவரது நண்பர்கள் சொல்லவும், அவரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இருவருக்குமே ஒருவரையொருவர் பிடித்துவிட்டது. மணப்பெண் சாந்தி BA படித்துள்ளார்.. இறுதியில், உறவினர்கள், நண்பர்கள் படை சூழ மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புதுக்குளத்துப்பாளையத்தில் உள்ள பகவதியம்மன் கோவிலில் திருமணம் விமரிசையாக நடைபெற்று, கரூர் மாவட்டத்தின் கவனத்தை பெற்றிருந்தது.
தற்போது அரியலுார் மாவட்டத்திலும் இதேபோன்ற நெகிழ்ச்சி திருமணம் நடந்துள்ளது.. ஜெயங்கொண்டான் அருகே சீனிவாசபுரத்தை சேர்ந்த பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் சத்யா.. 27 வயதாகிறது.. கடலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த மதிஒளி என்பவருடன் தற்போது திருமணம் நடந்துள்ளது. மதிஒளிக்கு 41 வயதாகிறது.
சத்யா வாழ்க்கை: மணமகன் மதி ஒளி சொல்லும்போது, "நான் ஸ்ரீமுஷ்ணத்தில் பாத்திரக்கடையில் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு அம்மா, அப்பா இல்லை. தனியாக வாழ்ந்து வந்த எனக்கு, சத்யாவின் வாழ்க்கை நிலை குறித்து உறவினர் மூலம் தெரியவந்தது. திருமணம் செய்வது குறித்து, நான் வேலை செய்யும் பாத்திரக் கடையின் ஓனர் முத்துராமலிங்கத்திடம் சொன்னேன்.
உடனே அவர், சத்யாவின் வீட்டிற்கு சென்று திருமணத்தை பேசி முடித்து திருமண ஏற்பாடுகளை செய்தார். அதன்படி, பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் எளிமையாக எங்கள் திருமணம் நடைபெற்றது" என்றார்.
பாராட்டுக்கள்: இந்த திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்து மணமக்களை மனதார வாழ்த்தினார்கள்.. பெயருக்கு தக்கபடி எண்ணமும் செயலும் கொண்டவர் மதிஒளி என்று, திருமணத்துக்கு வந்திருந்த அத்தனை பேரும் பாராட்டினார்கள். இதனிடையே. செய்தியாளர்களிடம் பேசிய மணமக்கள், அரசு உதவி வழங்கினால், எங்கள் வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications