என்னென்ன வார்த்தைகளை பேசணும்னு சொல்லிட்டீங்கன்னா நல்லாருக்கும்.. பாஜக அரசு மீது திருமா அட்டாக்!
அரியலூர் : நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் என்று அறிவித்துள்ளதைப் போல, பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளையும் கூறி விடுங்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஊழல், துரோகம், சர்வாதிகாரி என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று மக்களவை செயலர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான கண்டனம் எழுந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை எம்.பிக்கள் பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்புக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேசக்கூடாத வார்த்தைகள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடக்கும்போது, கண்ணியம் குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலர் வெளியிட்டுள்ளார். வரும் ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது.

அராஜகம்
அதன்படி வெட்கக்கேடு, துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், அராஜகம், சர்வாதிகாரம், சகுனி, ரத்தக்களரி, கொரோனா பரப்புவர், துரோகம் செய்தார், நாடகம், கபடநாடகம், திறமையற்றவர், அராஜகம் செய்பவர், மோசக்காரர், லாலிபாப், பாப்கட், ஒட்டுக்கேட்பு, வாய்ஜாலம், அழிவு சக்தி, இரட்டை வேடம், பயனற்றது, கொடூரமானவர், ஏமாற்றினார், முதலைக் கண்ணீர் உள்ளிட்ட பல வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசக்கூடிய வார்த்தைகளை அறிவியுங்கள்
இந்நிலையில், இன்று அரியலூர் மாவட்டம் அங்கனூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி, "நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்ற பட்டியலை நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்டுள்ளார். அப்படியென்றால், ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கி ஜே உள்ளிட்ட வார்த்தைகளை தான் பயன்படுத்த வேண்டுமா என்பது குறித்தும் விளக்க வேண்டும். பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளை அறிவிக்க வேண்டும். இவ்வகையான நடவடிக்கை எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெரிக்கும் செயல்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் ரவி
மேலும் பேசிய திருமாவளவன், "தமிழகத்தின் ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக செயல்படுகிறார். அவரது செயல்பாடு ஒட்டுமொத்த தேசத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நாம் பயன்படுத்தக் கூடிய அனைத்து பொருட்களுக்கும், சேவைக்கும் வருங்காலங்களில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
Recommended Video

தேர்வில் சாதி
பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தேர்வில் தமிழகத்தில் மிக தாழ்ந்த சாதி என கேள்வி கேட்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சாதி இல்லை எனக் கூறி வரும் நிலையில் இது போன்ற கேள்வி தேர்வில் இடம்பெற்றுள்ளது. சனாதனத்தின் உச்சமாக கருதப்படுகிறது. இதற்கு காரணமான பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications