ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக?
சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தனிக்கட்சியைத் தொடங்கி இடைத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான 118 கிடைக்கவில்லை. இதனால் 108 இடங்கள் பெற்ற தவெக, காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வென்றார். இரண்டில் வென்றிருந்தாலும் சட்டபடி ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டார். அந்த தொகுதிக்கு மற்ற மாநில தேர்தல்களுடன் இடைத்தேர்தல் நடத்தப்படும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக இரண்டாக பிளந்தது. அதில் சிவி சண்முகம்- வேலுமணி தலைமையிலான 25 சட்டசபை உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் அவர்களுக்கு எந்த இடமும் கொடுக்கவில்லை.
இதையடுத்து மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.
இதனால் இந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்னும் 6 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும். இந்த இடைத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்த போது ஆளும்கட்சியாக இருந்த திமுகவின் ஊழல்களை பட்டியலிட்டு காட்டினார். மேலும் "என் மண், என் மக்கள்" எனும் யாத்திரையை நடத்தி பாஜகவின் கட்டமைப்பை பலப்படுத்தினார்.
இதனால் அவருக்கென தனி ரசிக பட்டாளமே உள்ளது. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்ட நிலையிலும் அவருக்கென ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்த நிலையிலும் அவருக்கு இதுவரை பதவி ஏதும் வழங்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பானது மறுக்கப்பட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் கூட அண்ணாமலைக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ எந்த சீட்டும் வழங்கவில்லை. அண்ணாமலையின் ஆதரவாளர் அமர்பிரசாத் ரெட்டி தனக்கு சீட் கொடுக்கும் என நினைத்து பிரச்சார வாகனத்தை வாங்கி வைத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தொடர்ந்து பாஜகவில் இருந்து அண்ணாமலை ஓரங்கப்படுத்தப்பட்டு வருவதால் அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாக பலர் புதுக்கட்சி தொடங்குமாறு தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினியின் ஆதரவுடன் தனிக்கட்சி தொடங்க அண்ணாமலை முடிவு செய்துள்ளாராம். ஆனால் இதற்கு ரஜினி ஆதரவை தெரிவித்திருக்க மாட்டார் என்றுதான் அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என சொன்னதிலிருந்தே எந்த ஒரு கட்சிக்கும் நபருக்கும் அவர் ஆதரவாக தேர்தல் களத்தில பேசியதே இல்லை. அப்படியிருக்கும் போது அண்ணாமலைக்கு எப்படி ஆதரவாக செயல்பட்டு தனிக்கட்சி தொடங்க பக்கபலமாக இருப்பார் என்ற கேள்வியும் எழுகிறது.
ரஜினிக்கு நெருக்கமானவர்களிடம் கேட்ட போது ரஜினியின் பெயரை தேவையில்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்றனர். இதுகுறித்து தமிழக பாஜக நிர்வாக அர்ஜுன மூர்த்தி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுயநல அரசியல் ஆதாய சந்தைக்காக அந்த சந்தையை கடந்து வாழும் நல்ல உள்ளங்களை பொருளாக்கி பயனடைய எண்ணாதீர்.
அது பயனாளிகளுக்கும் பயன்படுத்தும் பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை என அண்ணாமலை, ரஜினியின் பெயரை பயன்படுத்தாமல் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
எது எப்படியோ அண்ணாமலை வரும் 15 ஆம் தேதி புதிய கட்சியை தொடங்குகிறார் என்கிறார்கள். ஆனி 1ஆம் தேதி அமாவாசை நாளில் புதிய கட்சியை அண்ணாமலை தொடங்குவார் என சொல்லப்படுகிறது. கட்சிக்கு பெயர் கூட பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் புதிய கட்சி தொடங்கியதும் தமிழக இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்கிறார்கள். அதிலும் கொங்கு மண்டலத்தில் வரும் பெருந்துறை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. என்ன நடக்குமோ தெரியவில்லை. அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதை பாஜக தடுத்து நிறுத்தி அவரை சமாதானம் செய்யுமா இல்லை வேடிக்கை பார்க்குமா என தெரியவில்லை. ஆனால் ஆந்திரா மாநிலத்தில் காலியாகும் ராஜ்யசபா தேர்தலில் அண்ணாமலைக்கு எம்பி பதவி கொடுத்து அவரை மத்தியமைச்சராக்கும் திட்டம் பாஜக தலைமையிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதெல்லாம் நடைபெறும் வரை எதையும் உறுதியாக சொல்ல முடியாது.












Click it and Unblock the Notifications