திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்!
திருப்பதி: விசிக தலைவரும், மக்களவை எம்.பியுமான திருமாவளவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். திருமாவளவன் திருப்பதி சென்று சாமி தரிசனம் மேற்கொண்டதற்கான காரணம் வெளிவந்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிட்ட விசிக 2 இடங்களில் வென்றது. விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தது விசிக. அதைத்தொடர்ந்து, தவெக அமைச்சரவையிலும் பங்குபெற்றுள்ளது. விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு, விஜய்யின் கேபினட்டில், சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் திருப்பதிக்குச் சென்றுள்ளார். திருமாவளவன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர் நேற்று இரவு திருப்பதிக்கு வந்தனர். அவர்கள் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் கோயிலுக்குள் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.
பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் எம்.பி திருமாவளவனும் இடம்பெற்றுள்ளார். அந்தவகையில், அந்த நிலைக்குழுவினரோடு சென்று ஆய்வுகளில் பங்கேற்றதோடு, திருப்பதி கோவிலிலும் தரிசனம் செய்துள்ளார் திருமாவளவன்.
இதனையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"பாதுகாப்புத் துறையின் இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு, கடந்த 22 ஆம் தேதியிலிருந்து ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. ஜம்மு காஷ்மீரில் தொடங்கி, பெங்களூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த அதிகாரிகளோடு கலந்துரையாடலில் பங்கேற்றோம்.
நிறைவாக, இன்றைக்கு 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், கர்நாடக முன்னாள் முதலமைச்சர், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் இங்கே திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்தோம். தேவஸ்தானம் மிகச் சிறப்பான முறையில் எங்களை வரவேற்று தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இந்த பயணம் அமைந்தது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications