5 நாளில் திருமணம்.. காதலி வீட்டில் ஆசை, ஆசையாய்.. மீன் குழம்பு சாப்பிட்ட புதுமாப்பிள்ளை உயிரிழப்பு!
சென்னை: திருமணம் நிச்சயிக்கப்பட்டு 17-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நடந்த இந்த சோக சம்பவம் குறித்து விரிவாக காண்போம். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

காதல் மலர்ந்தது
அப்போது பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் ஒரு இளம்பெண்ணை பார்த்தவுடன் காதல் வலையில் விழுந்தார் நிஷாந்த். உடனே அந்த பெண்ணும் நிஷாந்த் மீது காதலில் மூழ்கினார். இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

பெற்றோர்கள் பச்சைக்கொடி
அந்த பெண்ணின் ஊர் அரியலூர் மாவட்டம் மகங்கை கொண்டசோழபுரம் ஆகும். தொடர்ந்து அவர்கள் காதலை கல்யாணமாக மாற்ற முடிவு செய்தனர். இதனை தங்கள் பெற்றோரிடமும் தெரிவித்தனர். இருவரின் பெற்றோர்களும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்கள். பின்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

17-ம் தேதி திருமணம்
நிஷாந்துக்கும், அவரது காதலிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் வருகிற 17-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நிஷாந்தும், அந்த இளம்பெண்ணும் எதிர்கால இன்ப கனவுகளில் மூழ்கி இருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிஷாந்த் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

சுடச்சுட மீன் குழம்பு
கேரளாவிலும் முழு ஊரடங்கு என்பதால் நிஷாந்த்தால் அவரது வீட்டுக்கு செல்ல முடியவில்லை. திருமணத்துக்கு சில நாட்களே உள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள காதலியின் வீட்டுக்கு சென்றார் நிஷாந்த். புது மாப்பிள்ளை என்பதால் நிஷாந்துக்கு விருந்து பலமாக இருந்தது. அங்கு அவருக்கு சுடச்சுட மீன் குழம்பு வைத்து கொடுத்தனர்.

பரிதாபமாக உயிரிழப்பு
வருங்கால மனைவி வீட்டில் உள்ள குழம்பு என்பதால் மீன் குழம்பை ருசித்து சாப்பிட்டார் நிஷாந்த். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்துள்ளார். இதனால் பதறிபோனவர்கள் உடனடியாக நிஷாந்தை சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த டாக்டர்கள் நிஷாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நிஷாந்தின் மரணம் குறித்து அவரது தந்தை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications