ஹனி டிராப் வலையில் 48 எம்எல்ஏக்கள்.. அதிரும் கர்நாடகா! உயர்மட்ட குழு விசாரணைக்கு அரசு உத்தரவு
பெங்களூர்: அழகான பெண்களை இனிக்க இனிக்க பேச வைத்து, படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ, படமாக எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது ஹனி டிராப் என்பதாகும். கர்நாடகாவில் தனக்கு எதிராக இது மாதிரி ஹனி டிராப் வலை வீசப்பட்டு தோல்வி அடைந்து இருப்பதாகவும், கடந்த 20 வருடங்களில் 48 எம்எல்ஏக்களுக்கு மேலாக ஹனிடிராப் மோசடிக்கு இலக்காகி இருப்பதாகவும் கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இதுபற்றி உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் அரசியல் எதிரிகளை வீழ்த்த சில அரசியல்வாதிகள் ஹனிடிராப் என்ற பாலியல் ஆயுதத்தை கையில் எடுத்து செயல்படுவதாகவும், அதுதொடர்பான வீடியோக்கள் இருப்பதாகவும் அடிக்கடி செய்திகள் வெளியாகி சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

ஹனிடிராப் முறையில் சிக்க வைக்க முயற்சி
இந்த நிலையில் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஒரு மூத்த அமைச்சரை இன்னொரு அமைச்சரே ஹனிடிராப் முறையில் சிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் கடந்த சில நாட்களாக கர்நாடக அரசியலில் பரபரப்பு சூழ்நிலை நிலவி வந்தது.
இந்த சூழ்நிலையில் இந்த ஹனிடிராப் விவகாரம் கர்நாடக சட்ட மன்றத்தில் புயலை கிளப்பியது. சட்டசபையில் பாஜகவை சேர்ந்த பசன கவுடா பாட்டீல் யத்னால் பேசும்போது, "கர்நாடகத்தில் அமைச்சர் ஹனிடிராப் முறையில் சிக்க வைக்க முயற்சி நடப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் கூட்டுறவுத்துறை அமைச்சரை கே.என்.ராஜண்ணாவை சிக்க வைக்க முயற்சி நடந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்த அரசு விரிவாக விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
48 எம்எல்ஏக்கள் குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள்
இதுகுறித்து கூட்டுறவுத்துறை மந்திரி கே.என்.ராஜண்ணா தனக்கு எதிராக நடந்த ஹனிடிராப் முயற்சி பற்றி பகீர் தகவல்களை வெளியிட்டார். அவர் பேசியதாவது:- "எனது பெயரை குறிப்பிட்டு பாஜகவினர் இங்கே பேசினர். அதனால் நான் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம். ஹனிடிராப் முறையில் என்னை சிக்க வைக்க முயற்சி நடந்தது உண்மை தான். அதற்கான ஆதாரங்களை நான் வைத்துள்ளேன். இதில் கர்நாடகம் மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவர்களும் அடங்கியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் 48 எம்.எல்.ஏக்கள் குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுகுறித்து நான் எழுத்து மூலமாக புகார் அளிக்கிறேன். விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும்" என்றார். இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட முடிவு செய்து இருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியுள்ளார்.
அழகான பெண்களை இனிக்க இனிக்க பேச வைத்து
'ஹனிடிராப்' என்பது அழகான பெண்களை இனிக்க இனிக்க பேச வைத்து, படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து அதனை வீடியோ, படமாக எடுத்து வைத்து மிரட்டி பணம் பறிப்பது என்பதாகும். இந்த ஹனிடிராப் முறையில் அழகான பெண்களை பயன்படுத்தி பணம் படைத்தவர்கள், மந்திரி, எம்எல்ஏக்கள், தொழில் அதிபர்கள், உயர்ந்த பதவியில் உள்ளவர்களை சிக்க வைக்கும் சூழ்ச்சிகளும் அரங்கேறி வருகிறது.
கர்நாடகத்தில் ஹனிடிராப் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூரில் இதுதொடர்பான வழக்குகள் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த பாஜக ஆட்சி காலத்திலேயே அமைச்சர்கள் மீது கூட இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.












Click it and Unblock the Notifications