'செல்லம் சீக்கிரம்' முதல் ஆளா வாக்கு சாவடிக்கு ஓடி வந்த பிரகாஷ்ராஜ்! உடனே போட்ட ட்வீட்தான் ஹைலைட்
பெங்களூரு: நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வந்து ஓட்டளித்துவிட்டு சென்றார். பெங்களூரு மாநகரில் சாந்தி நகரில் தனது வாக்கினை நடிகர் பிரகாஷ் ராஜ் செலுத்தினார்.
கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற மே 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஆட்சி பதவி ஏற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், 224 தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி ( இன்று) ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி அறிவித்தது.

அதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த ஏப்ரல் 13-ந் தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் முடிந்தது. இதையடுத்து 21-ந்தேதி மனுக்கள் பரிசீலனையும், 24-ந்தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடந்தது. அதைத்தொடர்ந்து 24-ந்தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இறுதி வேட்பாளர் பட்டியல்: அதன்படி 224 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் பா.ஜனதா சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 223 வேட்பாளர்களும் (மேல்கோட்டை தொகுதியில் மறைந்த விவசாய கட்சி தலைவர் புட்டண்ணய்யா மகன் தர்ஷனுக்கு ஆதரவு), ஜனதாதளம் (எஸ்) கட்சி 209 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர். ஒரே ஒரு திருநங்கை போட்டியிடுகிறார்.
கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் தகுதி படைத்தவர்கள் ஆவர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், பிற வாக்காளர்கள் 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர். இதில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 558 பேர் இளம் வாக்காளர்கள், 5 லட்சத்து 71 ஆயிரத்து 281 பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆவார்கள். 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 12 லட்சத்து 15 ஆயிரத்து 920 பேர் உள்ளனர். இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 37 ஆயிரத்து 777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
#WATCH | Actor Prakash Raj arrives at polling booth in St. Joseph's School in Shanti Nagar, Bengaluru to cast his vote for #KarnatakaAssemblyElection pic.twitter.com/DsYgbc3ko3
— ANI (@ANI) May 10, 2023
காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். பெங்களூரு மாநகரில் உள்ள சாந்தி நகரில் செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குக்ச்சாவடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் காலையிலேயே முதல் ஆளாக வந்து வாக்களித்து விட்டு சென்றார். நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்துவிட்டு சென்ற வீடியோ ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
இதனிடையே தான் வாக்களித்த வீடியோ ஷேர் செய்த பிரகாஷ் ராஜ், அதற்கு கேப்சனாக மதவாத அரசியலுக்கு எதிராக, 40% ஊழல் சர்க்காருக்கு எதிராக வாக்களித்தேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications