பெங்களூர் சிறையா, ஸ்டார் ஹோட்டலா.. சசிகலா அப்புறம் தர்ஷன்! ரூபா ஞாபகம் இருக்கா? பணம் இருந்தா போதும்
பெங்களூர்: கொலை வழக்கில் சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு, சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே இதேபோன்று சசிகலாவுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்திருந்தது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது.. சாமானிய மக்களுக்கு மட்டுமே சிறை, தண்டனைக்கு உரிய இடமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.
சிறை என்பது தவறு செய்பவர்கள், தாங்கள் செய்த தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளும் இடமாக இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் பணம் படைத்தவர்களுக்கு சிறை என்பது சுற்றுலா தலம் போல மாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. சசிகலா விஷயத்தில் இந்த குற்றச்சாட்டு சற்று பலமாகவே இருந்தது.

கடந்த 2017ம் ஆண்டு, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சிறைத்துறை டிஜிபியாக இருந்த ரூபா, சசிகலா சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். அதாவது சிறையில் சசிகலாவுக்கு மட்டும் தனியாக 5 செல்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. வேண்டிய நேரத்தில் சசிகலா சுதந்திரமாக வெளியில் சென்று வரும் அளவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன.
இவருக்கு மட்டும் என தனியாக சமையல் செய்யப்பட்டது. சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆடைகளுக்கு பதில், சசிகலா தனது சொந்த ஆடையையே அணிந்திருந்தார். தவிர நாற்காலி, பழங்கள், பிஸ்கெட்டுகள் போன்றவையும் சசிகலாவுக்கு கொடுக்கப்டப்டிருந்தது என்று ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இது இந்த குற்றச்சாட்டுகளை ஆராய அமைக்கப்பட்ட கமிட்டியும், இதனை உறுதி செய்தது.
இந்நிலையில், தற்போது இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் தர்ஷனுக்கும் இஷ்டத்திற்கு சலுகைகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. அதாவது சிறையில் உள்ள தர்ஷன், சக குற்றவாளிகளுடன் ஒன்றாக அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்ததை போன்ற படங்கள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது.
சிறையில் தேநீர் வழங்கப்படுவது வழக்கம்தான். ஆனால், அதை பெற லைனில் நிற்க வேண்டும். எல்லா நேரத்திலும் தேநீர் தரப்படாது. மட்டுமல்லாது சிறை கைதிகளுக்கு என்று தனியாக நாற்காலிகள் வழங்கப்படுவது கிடையாது. இப்படி இருக்கையில், தர்ஷனுக்கு மட்டும் இதெல்லாம் எங்கிருந்து கிடைத்தது? இதைவிட ஹைலைட் என்னவெனில், தர்ஷன் சிறையிலிருந்து படி வீடியோ கால் பேசுவது போன்ற படம் சோஷியல் மீடியாவில் பரவியதுதான்.
சிறையில் செல்போன்களை பயன்படுத்த தடை இருக்கிறது. ஆனால், அதையும் மீறி செல்போன்கள் பயன்படுத்தப்படுகிறது என ரூபா கூறியிருந்தார். இதையெல்லாம் அறிந்த சிறைத்துறை, சிறையில் ஜாமர்களை பொருத்தியிருந்தது. ஆனால், இந்த ஜாமர்கள் பழுதடைந்து போவதாகவும், அது வேண்டும் என்றே சரி செய்யாமல் விடப்படுவதாகவும் ரூபா கூறியிருந்தார். இவை அனைத்தும் சசிகலா விஷயத்தில் மட்டுமல்லாது, தர்ஷன் விஷயத்தில் சரியாக பொருந்துகிறது.
ஆக பிரச்னை பரப்பன அக்ரஹாரா சிறையில்தான் இருக்கிறது. பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற சூழல் இந்த சிறையில் இருக்கிறது. குற்றம் செய்தவர்கள் திருந்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றுதான் சிறைகள் செயல்படுகின்றன. ஆனால், அங்கு அடைக்கப்படுபவர்களுக்கு இப்படியான சலுகைகள் வழங்கினால்.. தாங்கள் குற்றவாளி என்பதே அவர்களால் உணர முடியாது. அப்புறம் எப்படி அவர்கள் திருந்துவார்கள்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மறுபுறம் சாமானிய மக்கள் குற்றம் செய்துவிட்டால் அவர்களுக்கு சிறையில் எந்த பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. அதேபோல அனைத்து தரப்பினரும் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications