Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் வெற்றி! தமிழகத்திலும் அண்ணாமலையை எதிர்க்கப்போகும் சசிகாந்த் செந்தில்! பிளான் இதுதானாமே

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார்ரூம் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் இவரது பங்கு உள்ள நிலையில் அண்ணாமலையை எதிர்த்து விரைவில் தமிழ்நாட்டில் தீவிர அரசியலில் ஈடுபட உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தை சேர்ந்த 2 பேர் முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டனர்.

தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை, கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் கர்நாடகாவில் முகாமிட்டு பல்வேறு மாநிலங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மேலும் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் அண்ணாமலை பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

After the Karnataka victory Sasikanth Senthil says he will be politically active in Tamil Nadu

அதேபோல் தான் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் முக்கிய பங்காற்றினார். இவர் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார்ரூம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் விருப்ப ஓய்வு பெற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் இவர் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

அதாவது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டபோது அதில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 தொகை, பெண்களுக்கு இலவசப் பேருந்து, பட்டம் படித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு மாதம் ரூ3000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.1,500 என்பன உள்பட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. இவற்றின் மூளையாக செயல்பட்டவர் சசிகாந்த் செந்தில் என கூறப்படுகிறது. அதாவது சசிகாந்த் செந்தில் களஆய்வு மேற்கொண்டு இதுபோன்ற திட்டங்களை வகுத்து அறிக்கை வழங்கினார். இதையடுத்து தான் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது.

மேலும் கர்நாடகா தேர்தலில் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்களின் இமேஜை உயர்த்தும் வகையிலான பணியை அவர் மேற்கொண்டார். மேலும் பாஜக ஆட்சியில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டி மக்களிடம் கொண்டு சென்றார். இப்படி வார்ரூம் பணிகளை அவர் ஒருங்கிணைப்பு செய்தார். கர்நாடகாவில் பாஜக தோல்வியை தழுவ கமிஷன் குற்றச்சாட்டு உள்ளிட்ட சில விஷயங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்தது என்றாலும் தேர்தல் வாக்குறுதியும் ‛கை' படைக்கு அதிக ஓட்டுகளை பெற்று கொடுத்ததை யாராலும் மறுக்க முடியாது.

இந்நிலையில் தான் கர்நாடகா தேர்தல் வெற்றி தொடர்பாக சமீபத்தில் சசிகாந்த் செந்தில் கூறுகையில், ‛‛கர்நாடகாவில் அண்ணாமலையின் வருகை பாஜகவுக்க பின்னடைவாக இருந்தது. மக்கள் மாற்றத்தை விரும்பி உள்ளனர். நாங்கள் (சசிகாந்த் செந்தில் மற்றும் அண்ணாமலை) இருவரும் எங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதனை செய்தோம். நான் இதற்கு முன்பு லைம்லைட்டில் இருந்தது இல்லை'' என்றார்.

மேலும் எதிர்கால திட்டம் பற்றி அவர் கூறுகையில், ‛‛நான் தனிப்பட்ட முறையில் தமிழ்நாட்டில் பணியாற்ற விரும்புகிறேன். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன். தமிழகம் தான் எனது தளமாக இருக்கும். இருப்பினும் இதுபோன்று பிற மாநிலங்களிலும் பணியாற்றுவோம். இருப்பினும் தமிழ்நாட்டில் அரசியல் சார்ந்து இன்னும் தீவிரமாக இருப்பேன். அப்போது அடிப்படை கட்டமைப்பில் இருந்து செயல்படுவேன்.

மேலும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழ்நாடு பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் நான் தமிழ்நாட்டை சேர்ந்தவனாக இருந்தாலும் ஏறக்குறைய 11 ஆண்டுகள் நான் அங்கு இல்லை. இதனால் நான் மீண்டும் மாநிலத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இதற்காக நான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்வேன்'' என்றார்.

இதன்மூலம் விரைவில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியின் மூலம் தமிழ்நாடு அரசியலில் தீவிரமாக செயல்பட உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. முன்னதாக சசிகாந்த் செந்தில் தமிழ்நாடு வார்ரூம் தலைவராக இருந்தார். ‛வாங்க ஒரு கை பார்ப்போம்' பிரசாரத்துக்கு முக்கிய பங்காற்றினார். அதன்பிறகு தற்போது காங்கிரஸ் கட்சிக்காக கர்நாடகாவில் வார்ரூம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வாகையும் சூடுயுள்ளார்.

After the Karnataka victory Sasikanth Senthil says he will be politically active in Tamil Nadu

முன்னதாக சசிகாந்த் செந்தில் அரசியலுக்கு நுழைவதற்கு முன்பு கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். 2009 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான இவர் தேசிய அளவில் 9 வது இடம் பிடித்தார். பல்லாரி, சித்ரதுர்கா, ராய்ச்சூர், தட்சின கன்னடா மாவட்டங்களின் கலெக்டராகவும், சிவமொக்கா மாவட்ட பஞ்சாயத்து சிஇஓவாகவும் பணியாற்றினார். மேலும் சுரங்கம் மற்றம் புவியில் துறை இயக்குனராகவும் செயல்பட்டார்.

இவர் தட்சின கன்னடா மாவட்ட கலெக்டராக செயல்பட்டபோது வகுப்புவாத வன்முறை மற்றும் மணல் மாபியாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். இவர் கலெ க்டராக இருந்தபோது வகுப்புவாத வன்முறை பெருமளவு குறைந்தது. அதன்பிறகு சசிகாந்த் தனது 2019 செப்டம்பர் 16ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த வேளையில் இந்த பொறுப்பில் சரியாக இருக்காது எனக்கூறி அவர் தனது ஐஏஎஸ் பதவியை துறந்தார். பாஜகவின் சில செயல்பாடுகள் பிடிக்காமல் அவர் தனது பணியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+