கர்நாடகா தேர்தல்.. தமிழக பாஜக பொறுப்பாளர் சிடி ரவி தொகுதியில் சேலை கிப்ட்.. தீயில் எரித்த மக்கள்
தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளரான சிடி ரவி கர்நாடகாவில் உள்ள சிக்கமகளூரு சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாராகி வருகிறார்.
பெங்களூர்: தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். விரைவில் அங்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அந்த தொகுதியில் சிடி ரவியின் ஆதரவாளர்கள் இலவச பொருட்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலவசங்களுக்கு எதிராக பாஜக குரல் கொடுத்து வரும் நிலையில் இந்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதற்கிடையே பாஜகவினர் வழங்கிய இலவச சேலையை பொதுமக்கள் தீயிட்டு எரித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போது அங்கு பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இதனால் தற்போது இருந்தே மாநிலத்தில் தேர்தல் ஜூரம் தொடங்கிவிட்டது. ஆட்சியை தக்க வைக்க பாஜக, மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும், செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்க உள்ளது.

வேட்பாளர் தேர்வில் தீவிரம்
ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் தொகுதிகளில் தேர்தல் பணியை துவங்கி உள்ளனர். மாறாக பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளில் வேட்பாளர் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலிட தலைவர்கள் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வெற்றி பெறும் வேட்பாளர்களை தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளனர். வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிடி ரவி எம்எல்ஏ
இது ஒருபுறம் இருக்க பல முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள் தங்களுக்கு உறுதியாக சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே தங்களது தொகுதியில் தேர்தல் பணியை துவங்கி உள்ளனர். அந்த வகையில் தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளராக உள்ள சிடி ரவியும் கர்நாடகாவில் தனது தொகுதியில் தேர்தல் பணியை தொடங்கி உள்ளார். சிடி ரவி தற்போது சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். தேசிய அரசியலுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பதவியோடு தமிழ்நாடு, கோவா, மகாராஷ்டிரா மாநில பாஜக மேலிட பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இலவச பொருட்கள் வழங்கல்
சிக்கமகளூர் சட்டசபை தொகுதியில் கடந்த 2004 முதல் 2018 வரை நடந்த 4 சட்டசபை தேர்தல்களிலும் சிடி ரவி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். வரும் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு 5வது முறையாக வெற்றி பெற சிடி ரவி காய்களை நகர்த்தி வருகிறார். இந்நிலையில் தான் சிக்கமகளூர் தொகுதியில் பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு இலவசமாக சேலை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உகாதி பண்டிகையை காரணம் காட்டி தேர்தலுக்காக சிடி ரவியின் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு இலவசங்களை வழங்குவதாக சொல்லப்படுகிறது. அதாவது இலவச சேலை வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது. சிக்கமகளூர் தொகுதிக்கு உட்பட்ட பக்தரஹள்ளி, மல்லலேனஹள்ளி கிராமத்தில் உள்ள மக்களுக்கு சேலை வழங்கப்பட்டுள்ளது.

தீயிட்டு எரிப்பு
இந்நிலையில் தான் பாஜகவினர் சேலை வழங்கியதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாஜகவினர் வழங்கிய சேலையை அவர்கள் தீயிட்டு எரித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அதில் கையில் சேலையை எரிக்கும் நபர், ‛‛கொரோனா சமயத்தில் ஒரு கிலோ அரிசி வழங்கவில்லை. இப்போது தேர்தல் சமயத்தில் உகாதியை காரணம் காட்டி பாஜகவினர் சேலை வழங்குகின்றனர். இது எங்களுக்கு வேண்டாம்'' எனக்கூறுகிறார்.












Click it and Unblock the Notifications