ஊட்டி போற மாதிரி, சம்மருக்கு சென்னை கிளம்பும் பெங்களூர் மக்கள்! என்னடா இது ஐடி சிட்டிக்கு வந்த சோதனை
பெங்களூர்: கோடைக்காலம் இப்போது தான் தொடங்கி உள்ள நிலையில் பெங்களூரில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. பொதுவாக சென்னையை விட பெங்களூரில் வெயில் குறைவாக இருக்கும் நிலையில் இந்த முறை நிலைமை மாறி உள்ளது. அதாவது சென்னையை விட குளுகுளு பெங்களூரில் வெப்பம் கிடுகிடுவென அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் சூழலில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்ப்போம்.
இந்தியாவின் ‛சிலிக்கான் வேலி' என புனைப்பெயர் பெற்ற நகராக அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூர் உள்ளது. இந்த புனைப்பெயர் கிடைக்க அங்கு நிரம்பி வழியும் பிரபல ஐடி நிறுவனங்கள் தான் காரணம். இந்தியாவில் பிற நகரங்களில் இல்லாத குளு குளு சீதோஷ்ண சூழலுக்காகவே பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் அலுவலகங்களை தொடங்கின.

ஆனால் சமீபகாலமாக பெங்களூரின் நிலை என்பது முற்றிலுமாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் கூட மரங்கள் இருந்தன. ஆனால் மேம்பால பணி, மெட்ரோ பணி உள்ளிட்டவற்றால் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் குளிர்ச்சி நிறைந்த பெங்களூர் படிப்படியாக வெயிலின் கோரப்பிடியில் சிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக 2010 ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு நவம்பர், டிசம்பர் மாதங்களில் குளிர் என்பது அதிகமாக இருக்கும். ஜனவரி வரை இந்த குளிர் நீடிக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளால் இந்த மாதங்களில் குளிர் என்பது அவ்வளவாக இருப்பது இல்லை. அதோடு ஏப்ரல், மே மாதங்களில் தான் பெங்களூரில் வெயில் என்பது மக்களை வாட்டும். அதுவும் சென்னையை ஒப்பிடும்போது பெங்களூரில் வெப்பநிலை என்பது மிகவும் குறைவாகவே இருக்கும்.

ஆனால் இப்போது நிலைமை தலைக்கீழாகவே மாறிவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் முதலே பெங்களூரில் வெப்பம் என்பது அதிகரிக்க தொடங்கியது. பிப்ரவரி மாதம் பெங்களூரில் வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் வெப்பநிலை என்பது 37 டிகிரியை தொடுகிறது.
கடந்த 2ம் தேதி பெங்களூரின் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது கடந்த 2016ம் ஆண்டில் இருந்து மார்ச் மாதத்தில் ஒரு நாளில் பதிவான 2வது அதிகபட்ச வெப்பமாக உள்ளது. இதற்கு முன்பு 2016ல் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. மேலும் இன்றைய தினம் பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 36 டிகிரி செல்சியஸாக இருந்தது. இன்று சென்னையில் 34 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவான நிலையில் பெங்களூரில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையை விட பெங்களூரில் வெயில் மக்களை வாட்டி வதைக்க தொடங்குகிறது.

சென்னை மட்டுமின்றி மும்பை, டெல்லியை விட பெங்களூரின் வெப்பம் என்பது வரும் நாட்களில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் 7 ம் தேதி வரை பெங்களூரின் பல பகுதிகளில் வெப்பத்தின் அதிகபட்ச அளவு என்பது 37 டிகிரி செல்சியஸை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நாட்களில் மும்பையை விட 3-4 டிகிரி செல்சியசும், டெல்லியை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும் இன்னும் மே மாதம் தொடங்காத நிலையில் கத்திரி வெயில் தலைக்காட்டாத சூழலிலேயே பெங்களூரில் நிலைமை மோசமாகி உள்ளது. இதனால் மே மாதத்தை நினைத்து பொதுமக்கள் புலம்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பருவமழை பொய்த்ததும், எல் நினோ ‛எஃபெக்ட்டும் தான் என கூறப்படுகிறது. மேலும் பெங்களூரில் இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாக நீடிக்கும்.
பெங்களூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால் ஐடி நிறுவன ஊழியர்கள் பிரச்சனையை எதிர்கொள்ள தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பெங்களூரில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஒருபக்கம் தண்ணீர் பிரச்சனை, இன்னொரு பக்கம் அதிகரிக்கும் வெப்பம் உள்ளிட்டவற்றால் ஐடி நிறுவனங்களும், அதன் ஊழியர்களும் விரக்தியடைந்துள்ளனர். குளுமையான காலநிலைக்காகவே பல ஐடி நிறுவனங்கள் சென்னை, ஹைதராபாத்தை விட்டு பெங்களூருவுக்கு படையெடுத்தன. ஆனால் தற்போதைய சீதோஷ்ண மாறுபாடு ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐடி ஊழியர்களை வதைக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications