நடிகை திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருக்கிறதா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த பதில்
சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி என கூடிய விரைவில் அறிவிப்பு வரலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சாடியிருந்தார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமாரிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த நிர்மல் குமார், "யார் யாருலாம் எந்த பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்களோ அவர்களைத்தான் நியமித்து இருக்கிறார்கள். பொருத்தம் இல்லாதவர்கள் யாரையும் நியமிக்கவில்லை" என்று கூறினார்.

கர்நாடகாவை சேர்ந்தவருக்கு பதவி
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளரான வெங்கடநாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக அறியப்படும் வெங்கட நாராயணா டெல்லி பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காவிரி, மேகதாது பிரச்சனை இரு மாநிலங்களுக்கும் நிலவும் நிலையில், கர்நாடகாவை சேர்ந்தவர். அதிலும் டிகே சிவக்குமாருக்கு நெருக்கமானவரை அந்த பதவியில் நியமனம் செய்வது சரியாக இருக்காது. அவரது நியமனத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
நிர்மல் குமாரிடம் கேள்வி
அதிமுக இன்னும் ஒருபடி மேலே போய் திரிஷா துணை முதல்வராக கூட நியமிக்கப்படலாம் என்று மிகவும் காட்டமாக விமர்சித்து இருந்தது. ஆர்பி உதயகுமார் இது குறித்து கூறும் போது, தமிழக முதல்வராக வந்துவிட்டால் எதோ தமிழ்நாடே தனது தனது அப்பன் வீட்டு சொத்தாகவும், தாத்தா வீட்டு சொத்தாகவும் வந்து விடுகிறதோ என்று நினைக்கிறாரோ? முதல்வர் விஜய்.. ஐந்தாண்டுகளுக்கு தான் மக்கள் வழங்கி உள்ளார்கள்.. அதுவும் நீங்கள் மெஜாரிட்டி இல்லாத ஒரு மைனாரிட்டி அரசாக இருந்து கொண்டு, இப்படி தமிழகத்தினுடைய உரிமையை காக்கின்ற.. எட்டு கோடி மக்களின் உரிமை காக்கும் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்கிற பெருமை வாய்ந்த இப்பதவியை சினிமாவில் தன்னோடு பழகியவர்கள் என்கிற காரணத்தினாலேயே கொடுத்து இருக்கிறார்.
திரைப்படங்களில் முக்கிய ரோல் தருவதைப் போல, முக்கிய கதாப்பாத்திரம் வழங்குவது போல இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஜெகதீஷ் பழனிச்சாமி, ஜான் ஆரோக்கியசாமி, ராதன் பண்டிட், வெங்கட் நாராயணா.. இப்படி எல்லோருக்கும் அரசு பதவி வழங்கிய மாண்புமிகு முதல்வர் விஜய் நட்புக்கும், உறவுக்கு இலக்கணமாக இருக்கின்ற பிரபல திரைப்பட கதாநாயகியாக இருக்கிற திரிஷா கூட விரைவில் துணை முதல்வர் என்ற அறிவிப்பு வெளியாகலாம்.. ஏனென்றால் ஜனநாயக நாட்டில் எதுவும் நடக்கலாம்" என்று சாடியிருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நிர்மல் குமாரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
பொருத்தம் இல்லாத யாரையும் நியமிக்கவில்லை
அப்போது, நடிகை திரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதனைக் கேட்டதும் சற்று முகம் மாறிய நிர்மல் குமார் தொடர்ந்து கூறியதாவது:- அப்படி எல்லாம் கிடையாது. யார் யாருக்கு என்ன மாதிரியாக இப்போ ஆலோசகர் இருக்காங்கன்னா, கண்டிப்பாக எல்லா அரசுகளும் அவங்களுக்கான ஆலோசர்களை வைத்து இருக்கிறார்கள்.
யார் யாருக்கு நம்பிக்கையாக இந்த அரசை கொண்டு வருவதற்கு கொள்கை முடிவுகள், கொள்கை தலைவர்கள் அனைத்தையும் முடிவு செய்தவர்கள் ஆலோசகரா இருக்காங்க.. அதில் எந்த தவறும் இல்லை. யார் யாருலாம் எந்த பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்களோ அவர்களைத்தான் நியமித்து இருக்கிறார்கள். பொருத்தம் இல்லாதவர்கள் யாரையும் நியமிக்கவில்லை" என்று கூறினார்.














Click it and Unblock the Notifications