ரூல்ஸா.. அப்படினா? பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இந்தியா.. 10 லட்சம் அபராதம் - ரெய்டுக்கு பிறகு அதிரடி!
டெல்லி : உரிய டிக்கெட் வைத்திருந்தும் விமானத்தில் பயணிகளை அனுமதிக்க மறுத்த ஏர் இந்தியாவுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது டிஜிசிஏ.
பெங்களூர், ஹைதராபாத், டெல்லி ஆகிய விமான நிலையங்களில், டி.ஜி.சி.ஏ ஆய்வு மேற்கொண்டதில், ஏர் இந்தியா நிறுவனம், விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை எனக் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா
உரிய டிக்கெட் வைத்திருந்தும் பயணிகளை வெவ்வேறு காரணங்களை கூறி விமானங்களில் ஏற்ற விமான நிறுவனங்கள் அனுமதி மறுப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மேலும், இவ்வாறு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்படும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளையும் விமான நிறுவனங்கள் செய்வதில்லை என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து பெங்களூரு, ஐதராபாத், டெல்லி ஆகிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் (டிஜிசிஏ) பல்வேறு சோதனைகளை நடத்தியது.

விதிமுறைகள்
விமான போக்குவரத்தின் புதிய விதிகளின்படி, விமான நிறுவனம் உரிய டிக்கெட் வைத்திருந்தபோதும் பயணியை விமானத்தில் அனுமதிக்கவில்லையென்றால் அடுத்த ஒருமணி நேரத்திற்குள் அந்த பயணிக்கு மாற்று விமானத்தை ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எந்த வித இழப்பீடும் வழங்க தேவையில்லை. ஆனால், பயணிக்கு 24 மணி நேரத்திற்குள் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தால் விமான நிறுவனம் அந்த பயணிக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மாற்று விமானத்தை 24 மணிநேரத்திற்கு மேல் ஏற்பாடு செய்தல் பயணிக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது விதி.

சோதனையில் சிக்கிய ஏர் இந்தியா
ஆனால், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் நடத்திய சோதனையில் இந்த விதிமுறைகளை பல விமான நிறுவனங்கள் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியா நிறுவனத்தில் இந்த விதிகள் நடைமுறைப்படுத்தப்படவே இல்லை என்பதும் சோதனையில் தெரியவந்தது. இந்த விதிகளை அமல்படுத்துவதற்கான கட்டமைப்புகளும் ஏர் இந்தியாவில் இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

10 லட்சம் அபராதம்
இதையடுத்து, உரிய டிக்கெட் வைத்திருந்தும் பயணிக்கு விமானத்தில் அனுமதிக்க மறுத்து, மாற்று ஏற்பாடுகளையும் வழங்காமல் விதிகளைப் பின்பற்றாத ஏர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடந்தது. இதையடுத்து அந்நிறுவனத்திற்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிறுவனங்கள் இனியும் விதிகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் அபராதம் விதிக்கப்படும் என DGCA எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications