உங்களுக்கு அதிருப்தி இல்லையா? டிகே சிவக்குமாரிடம் விழுந்த கேள்வி.. டக்கென கொடுத்த அந்த பதில்
பெங்களூர்: கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் முதல்வர் பதவி கொடுக்காதது குறித்து உங்களுக்கு அதிருப்தி இல்லையா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு டிகே சிவக்குமார் பதில் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 13-ந் தேதி எண்ணப்பட்டது. இதில் காங்கிரஸ் 135 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.

முதல்வர் பதவியை பெறுவதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இருவருமே காங்கிரஸ் தலைமையிடத்தில் முட்டி மோதினர். எனினும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதை சாதகமாக வைத்துக் கொண்ட சித்தராமையா தனது கோரிக்கையில் விடாப்பிடியாக நின்றார்.
எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை வைத்து முடிவு செய்யாமல் கட்சிக்காக உழைத்த எனக்கு காங்கிரஸ் மேலிடம் முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்பது டிகே சிவக்குமாரின் கோரிக்கையாக இருந்தது. இதனால், யாரை அறிவிப்பது என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கும் பெரும் தலைவலி ஏற்பட்டது. மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் எடுத்துக் கூறியும் டிகே சிவக்குமார் தனது கோரிக்கையை கைவிட மறுத்து விடாப்பிடியாக இருந்ததாக தகவல் வெளியானது.
இதனால், கடந்த 5 நாட்களாகவே முதல்வர் விவகாரம் தொடர்பாக கர்நாடகா மட்டும் இன்றி டெல்லியும் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இன்றி காணப்பட்டது. இழுபறி நீடித்துக் கொண்டே சென்றதால் இந்த விவகாரத்தில் தலையிட்ட சோனியா காந்தி, கட்சியின் நலன் கருதி துணை முதல்-மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும், உங்களின் உழைப்பு என்ன என்று கட்சி நன்றாக புரிந்து கொண்டுள்ளது என்றும், உரிய நேரத்தில் உங்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என்றும், நான் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். உங்களுக்கு தற்போது 62 வயது தான் ஆகிறது.

இன்னும் பல ஆண்டுகள் அரசியலில் ஜொலிக்கலாம். இதனால் அதிருப்தி வேண்டாம். சித்தராமையாவும் மூத்த தலைவர் தான். அவரும் கட்சியில் செல்வாக்குடன் உள்ளார். இதனால் துணை முதல்வர் பதவியை ஏற்பதோடு, உற்சாகமாக செயல்பட்டு காங்கிரஸ் தலைவராக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பரிசாக கொடுங்கள்.
உங்களுக்கான அங்கீகாரம் நிச்சயம் காங்கிரஸ் கட்சியில் உண்டு'' எனக்கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் டிகே சிவக்குமார் துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். சித்தராமையாவிற்கு முதல்வர் பொறுப்பு, டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பொறுப்பு என்ற பார்முலாவிற்கு இருவரும் ஒப்புக்கொண்டதால் இன்று காங்கிரஸ் கட்சி முதல்வர் தேர்வு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து சித்தாராமையா ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து டெல்லியில் இருந்து சித்தராமையாவும் டிகே சிவக்குமாரும் ஒரே விமானத்தில் கர்நாடகா திரும்பினர். இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் குழு தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
இதனிடையே, டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. இது தொடர்பாக டிகே சிவக்குமாரின் சகோதரர் டிகே சுரேஷ் பகிரங்கமாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், டெல்லியில் டிகே சிவக்குமாரிடம் செய்தியாளர்கள், இந்த அறிவிப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதா? என்று கேட்டனர்.
அதற்கு பதிலளித்த டிகே சிவக்குமார், "நான் ஏன் அதிருப்தியாக வேண்டும்? இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது" என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்து விட்டு சென்றார். முன்னதாக டிகே சிவகுமாரின் சகோதரரான டிகே சுரேஷ் எம்பி, சித்தராமையா முதல்வர்; டிகே சிவகுமார் துணை முதல்வர் என்கிற இந்த பார்முலாவில் எங்களுக்கு திருப்தி இல்லை..
நாங்கள் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை என்பது உண்மைதான். ஆனால் கன்னட மக்களின் நன்மைக்காக இதனை இப்போது ஏற்கிறோம். அடுத்து என்ன என்பதற்கு நீண்டகாலம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். டிகே சுரேஷ் எம்பியின் இந்த பேச்சு பரபரப்பை கிளப்பியிருந்தது.












Click it and Unblock the Notifications