என்னாச்சு.. கிடுகிடு.. பெங்களூரில் கொரோனா பாசிட்டிவ் ரேட் 9 மடங்கு அதிகரிப்பு! அலர்ட்டாகும் அதிகாரிகள்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் கோவிட் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட் அதிகரித்து வருகிறது. இது இந்த ஆண்டு தொடக்கத்தில் பெங்களூரில் வெறும் 1 சதவிகிதத்திற்கும் குறைவான அளவில் இருந்த நிலையில், தற்போது பலமடங்காக அதிகரித்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்று தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர் ஓரளவு குறைந்தது. இருப்பினும், தற்போதும் மீண்டும் தீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக தேசிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பானது குறைவாக இருந்தது. இந்நிலையில், இது மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. குறிப்பாக பெருநகரங்களில் இதன் பாதிப்பானது தீவிரமடைந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் நான்கு வாரங்களில் தொற்று பாதிப்பானது மேற்குறிப்பிட்டதைப்போல 1 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது. ஆனால், 5வது வாரத்தில் இது 1 சதவிகிதத்தை கடந்திருக்கிறது. அதேபோல, தற்போது 10வது வாரத்தில் 9.58 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது பரிசோதித்ததில், கிட்டத்தட்ட 100ல் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இந்த விகிதம் இவ்வளவு அதிகமாக இருப்பினும், தினசரி பாதிப்பானது ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கிறது. கடந்த 19ம் தேதி நிலவரப்படி பெங்களூரில் மொத்தம் 394 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனெனில் கொரோனா பாதித்த பலரும் என்ன என்று தெரியாமல், சோதனை செய்யாமலும், சிகிச்சை பெறாமலும் வீட்டில் இருப்பது காரணமாக இருந்திருக்கலாம்.
எனவே சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா தொற்று தவிர 23 பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடகா மாநிலம் முழுவதும் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் இந்த பாதிப்பும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுவரை பெங்களூர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 68 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 50 பேர் பொது வார்டிலும் 13 பேர் ஐசியு வார்டிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிலருக்கு கொமொர்பிடிட்டி எனும் நாள்பட்ட நோய் பாதிப்பு இருக்கிறது.
எனவேதான் அவர்கள் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இச்சூழலில் மாநில சுகாதார ஆணையர் டி.ரந்தீப் சுகாதார ஊழியர்களுக்கு சில உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட இருக்கிறது. பெல்லந்தூர் மற்றும் எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதிகளில் கடந்த 10 நாட்களில் நாளொன்றுக்கு சுமார் 3 பேர் வீதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். சில மருத்துவர்கள் இது கொரோனா தொற்றும் இல்லை, ஃப்ளூ பாதிப்பும் கிடையாது என்றும், இது ஒரு வகை புதிய வைரஸ் பாதிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் கடுமையான காய்ச்சல், தலைவலி போன்றவற்றுடன் லேசான நெஞ்சுவலியையும் உணர்வதாக தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த பாதிப்பு வந்துவிட்டால் சரியாக ஒரு வாரம் வரை ஆவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாடு ழுவதும் கொரோனா தொற்று பரவல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலாசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications