நல்லா இருக்கே... விமான பயணிகளுக்கு வழிகாட்டும் ரோபோக்கள்... பெங்களூரில் அறிமுகம்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் உதவி செய்யும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
பெங்களூரில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து உள்நாட்டு விமானங்களும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் வந்து செல்கின்றன.
இதனை தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையத்தில் பயணிகளுக்கான சேவையை தடையின்றி வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரோபோக்கள் அறிமுகம்
இதற்காக புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது விமான நிலையத்தில் ரோபாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் 10 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரோபோக்கள் ‛டெமி' (Temi) என அழைக்கப்பட்டு வருகின்றன.

பயன்பாடு என்னென்ன?
பரிசோதனை அடிப்படையில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு வழிக்காட்டும் வகையில் செயல்படுகிறது. அதாவது விமான நிலையம் வரும் பயணிகள் பலருக்கும் விமானத்தில் ஏற செல்ல வேண்டிய வழி, குடிநீர், கழிவறை, பொருட்கள் வைக்கும் இடம் உள்ளிட்ட விபரங்கள் தெரிவதில்லை. ஆங்காங்கே அறிவிப்புகள் பலகைகள் இருந்தாலும் கூட பலரும் இன்னும் குழப்பமடைகின்றனர். இத்தகைய பயணிகளுக்கு உதவுவது தான் இந்த ரோபோக்களின் பணியாக உள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதிகாரி கூறுவது என்ன?
இதுகுறித்து விமான நிலையத்தின் முந்தைய தலைவர் சம்ப்ரீத் சதானந்த் கோட்யான் கூறுகையில், "இந்த ரோபோக்கள் ‛ஸ்கை' அல்லது ‛டெமி' என அழைக்கப்படுகிறது. பயணிகள் தங்களுக்கு எழும் கேள்விகளை அந்த ரோபோக்களிடம் கேட்டால் அவை பதிலளிக்கும். மேலும் பயணிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் மட்டுமின்றி அந்த இடங்களை அடையாளம் காட்டும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் பரிசோதனை அடிப்படையில் 10 ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் ரோபோக்களின் எண்ணிக்கையை அதிகரிப்போம்'' என்றார்.

ரோபோக்களின் பிற பயன்பாடு
உலகம் முழுவதும் விமான நிலையங்களில் ரோபோக்களின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக விமான நிலைய ஓட்டல்களில் ஆர்டர்கள் எடுத்து உணவு வினியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் சோதனை, சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா நோய் பரவல் காலத்தில் சில விமான நிலைய வளாகங்களில் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications