இந்தியாவை உலுக்கிய பெங்களூர் அதுல் சுபாஷ் வழக்கு.. மனைவி, மாமியாருக்கு சிக்கல்.. ஹைகோர்ட் அதிரடி
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கம்ப்யூட்டர் என்ஜினியராக உள்ள அதுல் சுபாஷின் மனைவி மற்றும் மாமியார் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுத்ததுடன், வழக்கின் விசாரணையை வருகிற ஜனவரி 21-ந்தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது. தன் மீது மனைவி, மாமியார் பொய்யான வரதட்சணை புகார் அளித்ததாக கூறி வீடியோ வெளியிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்ட அதுல் சுபாஷ் விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பெங்களூர் மாரத்தஹள்ளி அருகே மஞ்சுநாத் லே-அவுட்டில் வசித்து வந்த 35 வயதாகும் அதுல் சுபாஷ் என்ற கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆவார். இவர் அங்குள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் இயக்குனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 9-ந் தேதி அதுல் சுபாஷ் மனைவி மீது குற்றம்சாட்டி விட்டு உயிரிழந்தார்.

உயிரை விடும் முன்பாக 40 பக்க கடிதமும், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இ-மெயில் மூலமாக தனது பிரச்சனையை உருக்கமாக கூறியிருந்தார். தன் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்கு பதிவாகி இருப்பதாகவும், இதில் தனக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தற்கொலை செய்யும் முன் வீடியோவும் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் பெங்களூர் மட்டுமின்றி, சென்னை, மும்பை, புனே,ஹைதராபாத், டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் வேலை செய்யும் ஐடி ஊழியர்களிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. உயிரை விட்ட அதுல் சுபாசுக்கு ஆதரவாகவும், ஆண்களை பாதுகாக்க சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வேகமாக பரவின. அதுல் சுபாஷ் தற்கொலை காரணமாக, மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் நிகிதா, அவரது தாய் நிஷா, அண்ணன் அனுராக் ஆகிய 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நிகிதா உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு, பெங்களூர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 4-ந்தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், அதுல் சுபாஷ் தற்கொலையில் தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி நிகிதா உள்பட 3 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அந்த மனு மீதான விசாரணை நேற்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நடந்தது. அப்போது நிகிதா தரப்பில் ஆஜரான வக்கீல், அதுல் சுபாஷ் தற்கொலைக்கும் மனுதாரர்களுக்கும் தொடர்பு இல்லாததால், அவர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இந்த வழக்கில் மேல் நோட்டமாக 3 பேரும் தற்கொலைக்கு தூண்டியது தெரியவருகிறது. அதனால் வழக்கை ரத்து செய்ய முடியாது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். அதனால் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications