ஆமா நாங்கதான் ஆக்கிரமிப்பு செய்துள்ளோம்.. ஒப்புக்கொண்ட பெங்களூர் டெக் பார்க்.. பாயும் "ஆக்சன்"
பெங்களூர்: கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் பெய்த கனமழை பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் நகரம் முழுவதும் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டது.
இந்நிலையில், மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்ததுதான் இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியது.
இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு பட்டியலில் விப்ரோ உள்ளிட்ட பெருநிறுவனங்கள் உள்ள நிலையில் தற்போது பாக்மேனே எனும் பெருநிறுவனம் தங்கள் ஆக்கிரமிப்பை ஒப்புக்கொண்டுள்ளது.

வெள்ளம்
இயற்கையில் மழைநீர் வடிகால்களை கொண்டுள்ளதாக சொல்லப்படும் பெங்களூர் நகரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழை வெள்ளத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த வெள்ளம் காரணமாக பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். இந்த வெள்ளத்திற்கு காரணம் மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்புகள்தான் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டின. இது ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பெங்களூர் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

ஆக்கிரமிப்பு
இந்த நடவடிக்கையில் சாமானிய மக்களின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஆக்கிரமிப்பு பட்டியில் இடம்பெற்றுள்ள விப்ரோ, பிரெஸ்டீஜ், ஈகோ ஸ்பேஸ், பாக்மேனே டெக் பார்க், கொலம்பியா ஆசியா மருத்துவமனை மற்றும் திவ்யஸ்ரீ வில்லாஸ் ஆகியவற்றின் மீது மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. இந்த பிரச்னை கர்நாடகாவில் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், தற்போது பாக்மேனே டெக் பார்க் தங்கள் ஆக்கிரமிப்பை ஒப்புக்கொண்டுள்ளது.

பாதிப்பு
தனது ஆக்கிரமிப்புகளை ஒப்புக்கொண்ட பாக்மேனே, அதேநேரத்தில் அருகில் உள்ள 'பூர்வாங்கரா' குடியிருப்பின் மீதும் பழி சுமத்தியுள்ளது. பெங்களூரில் வெள்ளம் ஏற்பட்டபோது கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் பாக்மேனே அமைந்துள்ள பகுதியும் ஒன்றாகும். பாக்மேனே டெக் பார்க் கட்டடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்து பார்த்ததில் சுமார் 2.4மீ அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிக்கும் பெருநிறுவனங்கள்
இந்த டெக் பார்க்கில் போயிங், அக்சென்ச்சர், EY, DELL மற்றும் எரிக்சன் போன்ற பெருநிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் ஆக்கிரமிப்பு குறித்து கூறிய பாக்மேனின் பொது மேலாளர் ஜி.பி. சக்ரவர்த்தி, "ஆம் நாங்கள் மழை நீர் வடிகால்களை மூடிவிட்டோம். மஹாதேவபுரா ஏரியில் இருந்து தண்ணீர் மீண்டும் இந்த பகுதிக்கு வருவதை தடுக்கவே இவ்வாறு செய்தோம். இவ்வாறு செய்யவில்லையெனில் பாக்மேனே வெள்ளத்தில் மூழ்கி இருக்கும். ஆனால் பிரதான குற்றவாளி புரவங்கரா பூர்வாரிட்ஜ் வில்லாக்கள்தான். இந்த வில்லாக்கள் பெரும்பாலான மழைநீர் வடிகால்கள் தடத்தை மூடிவிட்டன." என்று கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு
புரவங்கரா பூர்வாரிட்ஜில் சுமார் 149 வில்லாக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு படுக்கையறைகள் உள்ளன. இப்படியான வில்லாக்களில் ஒன்று பாக்மேனே தொழில்நுட்ப பூங்காவின் சுற்றுச் சுவரையொட்டியுள்ளது. இந்த வில்லாக்கள் சுமார் 2.5 மீட்டர் அளவுக்கு வடிகால்களை ஆக்கிரமித்திருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. பெங்களூரில் இதுபோல சுமார் 700 மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேள்வி
மேலும், இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்கு எதிராக குடியிருப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே நீதிமன்ற உத்தரவையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செயற்பொறியாளர் மாலதி கூறியுள்ளார். சமானிய மக்களின் குடியிருப்புகள் ஆக்கிரமிப்புகளென மாநகராட்சி இடித்து தள்ளிய நிலையில், இதுபோன்ற பெருநிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏன் இவ்வளவு சுணக்கம் என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications