"11,344 சேலை, 750 செருப்புக்கள்.." ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை ஏலம் விட உத்தரவு
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை உடனடியாக பொது ஏலம் விடப் பெங்களூர் நகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-96 வரை தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் தமிழ்நாட்டில் நடந்த நிலையில், பின் பல்வேறு காரணங்களால் இது கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.
சுமார் 18 ஆண்டுக்காலம் நடைபெற்ற இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் முன்னரே ஜெயலலிதா கடந்த 2016இல் மரணமடைந்தார். நீண்ட தாமதத்திற்குப் பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வரை சென்ற நிலையில், கடைசியில் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வரும் போது, ஜெயலலிதா மரணமடைந்திருந்த நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் மட்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா தண்டனை காலத்தை அனுபவித்தனர். இவர்கள் கடந்த 2021இல் விடுதலையானார்கள்.

பொருட்கள்
இதில் குற்றவாளிகள் தண்டனை காலத்தை அனுபவித்துவிட்ட போதிலும், இன்னும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பெங்களூரில் உள்ள கர்நாடக அரசுக் கருவூலத்தில் இருக்கிறது. புடவை, வாட்ச், சால்வை, ஆபரணங்கள் என ஏகப்பட்ட பொருட்கள் அங்குப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாக உள்ளது. இதற்கிடையே பெங்களூரில் வசித்து வரும் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் இது தொடர்பாகக் கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார்.

கோரிக்கை
சுமார் 20 ஆண்டுகளாக அந்த பொருட்கள் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சால்வை, புடவை, காலணிகள் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தை மனுவாகவும் பரிசீலனைக்க கோரிக்கை விடுத்திருந்தார்.. ஜெயலலிதாவிடம் இருந்து 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள் நீண்ட நாட்களாக அப்படியே உள்ளதாக அதில் குறிப்பிட்ட அவர் லெதர் காலணியாக இருந்தாலும் அதன் தரம் குறையும் என்பதால் அதை விற்று பணத்தைக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

ஏலம்விட உத்தரவு
இதனிடையே இந்த வழக்கில் பெங்களூர் நகர சிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அரசு வழக்கறிஞரை நியமித்து ஏலம் விட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலை, காலணிகளை ஏலம் விட மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு நரசிம்ம மூர்த்தி கோரிக்கை விடுத்த நிலையில், கடிகாரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் முறைப்படி ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரில் விசாரணை நடந்தது அனைவருக்கும் தெரியும்.. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் முன்பு வரை, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தமிழ்நாடு அரசுக்குச் சேருமா அல்லது கர்நாடகாவுக்குச் சேருமா என்று குழப்பம் இருந்தது. இருப்பினும், நீதிபதி தனது தீர்ப்பில் அந்த பொருட்கள் கர்நாடக கருவூலத்திற்கே செல்லும் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அனைத்து பொருட்களையும் ஏலம் விடப் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications