அடப்பாவமே? மரத்தை கட்டிப்பிடிக்க ரூ.1,500.. பெங்களூரில் அறிமுகமான வனக்குளியல்.. இதுலாம் ரொம்ப ஓவர்!
பெங்களூர்: பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று வனக்குளியல் என்ற பெயரில் மரத்தை கட்டிப்பிடிக்க ரூ.1,500 வசூலிக்க முடிவு செய்துள்ளது.இதுதொடர்பான விபரம் தற்பாது வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அந்த நிறுவனத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
தற்போதைய வாழ்க்கையில் பணம் என்பது பிரதானமாக உள்ளது. சமூகத்தில் மதிப்புமிக்க நபராக மாற வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும் என்ற சூழல் உருவாகும் நிலை இருக்கிறது. இதனால் பலரும் பல்வேறு தொழில்களை தொடங்கி வருகின்றனர்.

குறிப்பாக நம் கிராமப்புறங்களில் கிடைக்கும் வேப்பங்குச்சியை கூட சைஸாக வெட்டி பாக்கெட்டில் அடைத்து பல்துலக்கும் பொருளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுகின்றனர். மேலும் குடிநீர் கூட தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் பல பிசினஸ்களை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தான் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது மனஅழுத்தத்தில் பாதிக்கப்படுவோரை அதில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பெங்களூர் போன்ற ஐடி சிட்டியில் பிரபல நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கவும், அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி கொடுக்கும் பணியை தான் இந்த நிறுவனம் செய்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தனியார் நிறுவனம், ‛‛வனக்குளியல்'' என்பதை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ‛‛தீ ஹீலிங் பவர் ஆஃப் ஃபாரஸ்ட்" எனும் சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்ப்பட்டது. அதன்படி மனஅழுத்தத்தில் விடுபட வேண்டி தங்கள் நிறுவனம் வருவோரை பெங்களூரில் மையப்பகுதியில் விதானசவுதா (கர்நாடகா சட்டசபை) மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை சுற்றி பரந்து விரிந்துள்ள கப்பன் பார்க் பூங்காவுக்கு அழைத்து செல்கின்றனர். அந்த பூங்காவில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் தோட்டக்கலைத்துறை மற்றும் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் ‛‛வனக்குளியல்' வாய்ப்பை தருவதாக கூறி அந்த நிறுவனம் பலரை பெங்களூர் கப்பன் பார்க் பூங்காவுக்கு அழைத்து சென்று மரத்தை கட்டிப்பிடிக்க வைப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் மரங்களுக்கு இடையே அவர்களை நடக்கவைத்து அமைதியான சூழலை தருவதாக தெரிவித்துள்ளது. இதற்காக 18 சதவீத ஜிஎஸ்டியுடன் ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்படும் என கூறியுள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தின் இணையதள பக்கத்தில், ‛‛நகர வாழ்க்கை மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதிலிருந்து விலகவும், மனஅமைதியை பெறவும் இயற்கையுடன் நேரம் செலவிட வேண்டும். ஆனால் நகரத்தில் இயற்கையான சூழலை கண்டுபிடிப்பது சவாலானது. ஆனால் ஜப்பானிய கலையான வனக் குளியல் என்பது ஒரு நல்ல அனுபவமாகும். இது காடுகளுக்குள் ஒரு ஆழ்ந்த, அமைதியான மற்றும் ஆத்மார்த்தமான நடைப்பயிற்சியாகும். இதன்மூலம் நீங்கள் புத்துணர்வுடன் இருப்பதைப் போல் உணர்வீர்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான போட்டோ என்பது இணையதளத்தில் தற்போ பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இது ஒரு நூதன மோசடி என பலர் விமர்சிக்கின்றனர். அதேவேளையில் இன்னும் சிலர் இந்த ஐடியா நமக்கு தோன்றாமல் போய்விட்டதே என வருத்தப்படுகின்றனர். இன்னும் சிலரோ கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் அருகே இப்படி ஒரு மோசடியா? என கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications