பெங்களுரில் 32 வயது ஊழியரின் சம்பளம் 1.65 லட்சம்.. தலை சுற்ற வைத்த செலவு பட்டியல்.. பாருங்க
பெங்களூர்: "சம்பளம் லட்சங்களில்... சேமிப்பு பூஜ்ஜியத்தில்" - இதுதான் இன்றைய பெங்களுர், சென்னை, புனே, மும்பை போன்ற மெட்ரோ நகர ஐடி ஊழியர்களின் தாரக மந்திரமாகிவிட்டது. பெங்களூரு வாழ்க்கை என்பது பைத்தியக்காரத்தனமானது" என்ற வாசகத்துடன் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு 32 வயது ஐடி ஊழியரின் பிப்ரவரி மாத செலவுப் பட்டியல், தற்போது இணையத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. மாதம் ₹1.65 லட்சம் செலவு செய்யும் அந்த ஊழியரின் கணக்கைப் பார்த்தால், சராசரி நடுத்தர வர்க்கத்தினர் தலைசுற்றிப் போவார்கள்.
வாயடைக்க வைக்கும் அந்த ஒரு மாதப் பட்ஜெட்
மாதம் ₹1.65 லட்சம் செலவு செய்யும் அந்த ஊழியரின் கணக்கைப் பார்த்தால் சராசரி நடுத்தர வர்க்கத்தினர் தலைசுற்றிப் போவார்கள். வாடகைக்கு ₹45,000, ஏஐ தொழில்நுட்பமான 'Claude'-க்கு ₹20,000, உடல்நலப் பராமரிப்புக்கு (Mounjaro) ₹20,000, மற்றும் ஜிம் ட்ரைனருக்கு ₹10,000 என அந்தப் பட்டியல் நீள்கிறது. இது போக ஸ்விக்கி, வார இறுதி பார்ட்டிகள் என ஒரு மாதத்திற்குள்ளேயே ஒரு பாமரனின் ஓராண்டுச் சம்பளத்தைக் கரைத்துள்ளார்.

அந்த ஐடி ஊழியரின் செலவுப் பட்டியலை அப்படியே பார்ப்போம்
வாடகை: ₹45,000
AI தொழில்நுட்பம் (Claude): ₹20,000
மருத்துவம் மற்றும் உடல்நலம் (Mounjaro): ₹20,000
விமானப் பயணம்: ₹16,000
சமையல் மற்றும் வீட்டு வேலை: ₹15,000
மளிகை பொருட்கள்: ₹15,000
மின்சாரம் மற்றும் இதர பில்கள்: ₹5,000
வெளி உணவுகள் மற்றும் பொழுதுபோக்கு: ₹9,000
விமான நிலைய டாக்ஸி: ₹4,000
உடற்பயிற்சி பயிற்சியாளர் (Personal Trainer): ₹10,000
மருந்துகள் மற்றும் இதர: ₹7,000
மொத்தம்: ₹1.65 லட்சம்
அன்றைய 'மகிழ்ச்சி' vs இன்றைய 'வசதி'
அன்று உடற்பயிற்சி என்பது அதிகாலையில் ஓடுவதாக இருந்தது; இன்று ₹10,000 'பர்சனல் ட்ரைனர்' இல்லாமல் ஜிம்முக்குச் செல்ல முடிவதில்லை. அன்று அம்மா கைமணத்தில் உருவான கட்டுச்சோறு சாப்பிட்டார்கள்; இன்று ஒரு பட்டனை அழுத்தினால் வரும் 'டெலிவரி' உணவுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகிறது. ஆனால் அம்மாவின் கட்டுச்சோறு ருசி இன்று எந்த கடையில் சாப்பிட்டாலும் இல்லை என்பதே எதார்த்தமான உண்மை
தொழில்நுட்ப அடிமைத்தனம்
அன்று செய்தித்தாளும், வானொலியும் தகவல்களைத் தந்தன. இன்று வேலைக்காக மட்டுமன்றி, பொழுதுபோக்கிற்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களுக்கு மாதம் ₹20,000 வரை சந்தா கட்டும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது அறிவார்ந்த முதலீடா அல்லது வசதியான வாழ்க்கைக்கு பழகியதன் விளைவா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
வாடகை எனும் கௌரவம்
பெங்களுரில் இந்திரா நகர், கோரமங்கலா, எம்.ஜி. சாலை மற்றும் லாவெல்லே சாலை, சர்ஜாபூர் சாலை மற்றும் ஒயிட்ஃபீல்டு , சாந்தி நகர் மற்றும் ரிச்மண்ட் டவுன் போன்ற பகுதிகளில் வாடகை என்பது சென்னையின் போர்ட் கிளப் மற்றும் போயஸ் கார்டனுக்கு இணையாக வாடகை உள்ள பகுதிளாக உள்ளன. வாடகை உண்மையில் மிக அதிகமாக உள்ளது. அதனால் 45000 வரை வாடகை செலுத்துவது பெங்களுரில் சாதாரணமாக உள்ளது.
சென்னையும் அதற்கு சற்றும் குறைந்தது இல்லை.. சென்னையில் ஓஎம்ஆர் அல்லது அடையாறு போன்ற பகுதிகளில் கௌரவத்திற்காக ₹40,000 வரை வாடகை கொடுத்துத் தங்குவது இன்று ஒரு டிரெண்டாகிவிட்டது. அதுமட்டுமல்ல, மயிலாப்பூர், தி நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, அண்ணா நகர் உள்பட முக்கிய பகுதிகளில் வாடகை சர்வ சாதாரணமாக 30000 முதல் 60000 வரை இருக்கிறது. நல்ல அடுக்குமாடி என்றால் ஒரு லட்சம் வரை கூட இருக்கிறது.
வாழ்க்கை முறையில் கோளாறு
"அப்பா காலத்தில் 10 ஆயிரம் ரூபாயில் ஒரு பெரிய குடும்பமே சீராக வாழ்ந்தது. இன்று ஒருவருக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் போதவில்லை என்றால், கோளாறு நகரத்தின் விலைவாசியில் இல்லை, நம் வாழ்க்கை முறையில் தான் இருக்கிறது" என நெட்டிசன்கள் பலர் கூறுகிறார்கள்.
ஐடி தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்
ஒருபுறம் முதலீடுகள் பல மடங்கு வளருகிறது. மறுபுறம் கைநிறையச் சம்பாதிக்கும் இளைஞர்கள் "பணம் போதவில்லை" என்று புலம்புவது ஒரு முரண்பாடான உண்மையாகவே இருக்கிறது. வசதியான வாழ்க்கை என்பது தவறு அல்ல; ஆனால் அந்த வசதி உங்களை 'பணமில்லா அடிமை'யாக மாற்றுகிறதா என்பதை இன்றைய ஐடி தலைமுறை சிந்திக்க வேண்டும் என்கிறார்கள் கிராம மக்கள்.












Click it and Unblock the Notifications