பெங்களூரை அலறவைத்த சைக்கோ கைது.. இந்திரா நகரில் 4 பேரை கத்தியால் குத்தியது ஏன்? திடுக் பின்னணி
பெங்களூர்: பெங்களூர் இந்திரா நகரில் இரவு நேரத்தில் 4 பேரை கத்தியால் குத்திவிட்டு எஸ்கேப்பான சைக்கோவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்று இந்திரா நகர். இங்கு காலை முதல் நள்ளிரவு வரை மக்களின் நடமாட்டம் என்பது தொடர்ந்து இருக்கும். இதற்கு அங்கு இருக்கும் பப்புகள், பிரபலமான ஹோட்டல்கள் தான் முக்கிய காரணமாகும்.

இந்நிலையில் தான் இந்திரா நகர் 100 அடி ரோட்டில் கடந்த 8ம் தேதி இரவு 9.30 மணி முதல் இரவு 10 மணிக்குள் நடந்த சம்பவம் பெங்களூர் மக்களை அலறவைத்தது. அதாவது இளைஞர் ஒருவர் 30 நிமிடத்தில் 4 பேரை குத்திவிட்டு ஓடினார். அதேபோல் மறுநாள் அதிகாலையில் 80 அடி ரோட்டிலும் ஒருவரை தாக்கி ஸ்கூட்டரை பறித்து கொண்டு எஸ்கேப் ஆனார்.
அதாவது 100 அடி ரோட்டில் சென்ற ஜஸ்வந்த் (19) மற்றும் மகேஷ் சீதாபதி (23). பானிபூரி வியாபாரிகளான தீபக் குமார் வர்மா (24), தம்மையா (34) ஆகியோரை கத்தியால் குத்தினார். இந்த 4 சம்பவங்களும் வெறும் 30 நிமிடத்தில் நடந்தது. அதன்பிறகு 9 ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் 80 அடி ரோட்டில் அடில் (24) என்பவரிடம் கேஆர்புரம் ரயில் நிலையத்தில் தன்னை டிராப் செய்யும்படி கூறி அவரையும் தாக்கி கத்தியால் தாக்கிவிட்டு ஸ்கூட்டரை பறித்து சென்றார்.
இதனால் பெங்களூரில் சைக்கோ கொலையாளி நுழைந்துவிட்டார் என்ற தகவலும் பரவின. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதற்கிடையே தான் சம்பவம் குறித்து இந்திரா நகர் போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் அந்த சைக்கோவை பிடிக்க பெங்களூர் கிழக்கு மண்டல இணை ஆணையர் ரமேஷ் பனோத் சார்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். பெங்களூர் புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி பெங்களூர் கிழக்கு மண்ட துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறுகையில், ‛‛சம்பவம் நடந்தபோது ஒய்சாலா ரோந்து வாகனத்தில் போலீசார் ஸ்கூட்டரில் சென்ற நபரை பின்தொடர்ந்து சென்றனர். அவர் கேஆர்புரம் நோக்கி சென்றார். ஆனால் திடீரென்று இருட்டில் அவர் மறைந்தார்.
மறுநாள் ஒசக்கோட்டையில் அவரை கைது செய்தோம். மெடிக்கல் ஷாப்பில் உணவுக்கு பணம் கேட்டபோது அவர் சிக்கினார். கைதான நபரின் பெயர் கடம்பா இவர் ஒல்டு பின்னமங்கலாவில் வசித்து வருகிறார். இவருக்கு 20 வயது ஆகிறது. ஏற்கனவே திருட்டு, தாக்குதல், வழிப்பறி என்று 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இந்திரா நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2024 மே மாதம் அவரது பெயர் ரவடி பட்டியலில் சேர்க்கப்பட்டது.
சமீபத்தில் குற்றவாளிகளுக்கு என்று சிறப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. நன்னடத்தையுடன் நடந்து கொண்டால் ரூ.1 லட்சம் பாண்ட் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடம்பா குற்றம் செய்யாமல் இருந்தார். ஆனால் மதுபானம் குடிக்க தாய் மற்றும் சகோதரியிடம் பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் கொடுக்காததால் இப்போது இந்திரா நகரில் 4 பேரை கத்தியால் குத்தி உள்ளார். பிஎன்எஸ் சட்டப்பிரிவு 109 (கொலை முயற்சி)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications