காரில் சென்ற குடும்பத்தை தாக்கிய இளைஞர்கள்.. 5 வயது குழந்தைக்கு கொட்டிய ரத்தம்! பெங்களூரில் திக்திக்
பெங்களூர்: பெங்களூரில் காரில் சென்று கொண்டு இருந்த குடும்பத்தினர் மீது அடையாளம் தெரியாத இளைஞர்கள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த குழந்தைக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடந்த இந்தச் சம்பவத்தில் அடையாளம் தெரியாத இரண்டு பேர் காரில் சென்று கொண்டு இருந்த குடும்பத்தினரிடம் பிரச்சினை செய்துள்ளனர்.

அவர்கள் காரின் பின்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் கண்ணடி பாய்ந்ததில் காரின் பின் சீட்டில் இருந்து 5 வயது குழந்தை படுகாயமடைந்தது. குழந்தையின் முகத்தில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியதால் பெற்றோர் பதறிப் போனார்கள்.
என்ன நடந்தது: இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த அனூப் என்பவர் அன்று தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், காரின் முன்பு பைக்கை நிறுத்தி ஏதோ வாக்குவாதம் செய்துள்ளனர். காரின் அனைத்து கண்ணாடிகளும் முழுமையாக லாக் செய்யப்பட்டு இருந்துள்ளது.
அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்றே பேசுவதை உணர்ந்த அனூப், அவர்களிடம் பேசாமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இருப்பினும், அனூப்பை பின்தொடர்ந்து வந்த அவர்கள் மீண்டும் காரை மறித்து நிறுத்தியுள்ளனர். கார் அருகே வந்த அவர்கள், கண்ணாடியை இறக்குமாறு அனூப்பை மிரட்டியுள்ளனர். இருப்பினும், கண்ணாடியை இறக்க மறுத்த அனூப் அங்கிருந்த காரை மெல்லக் காரை எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், அருகே இருந்த கல்லை எடுத்து காரின் பின்புற கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்.
இவை அனைத்தும் காரில் உள்ளே இருந்த அனூப்பின் மனைவி வீடியோவாக எடுத்துள்ளார். அப்போது அனூப், "என் குழந்தை பின்னால் தான் இருக்கிறது" என்று கத்துவது தெளிவாகக் கேட்கிறது. மேலும், காயமடைந்த குழந்தை அழும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது. குழந்தையின் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
மேலும், அந்த வீடியோவில் காரின் பின்பக்கம் கண்ணாடி துகள்கள் சுக்கு நூறாக உடைந்து கிடப்பதும், ரத்தக் கறை இருப்பதும் கூட தெளிவாகத் தெரிகிறது. தனது வீட்டில் இருந்து வெறும் 2 கிமீ தூரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அனூப் கூறுகிறார். அவர்கள் தங்கள் காரைப் பின்தொடர்ந்து வந்து, தங்களைத் தாக்கியதாக அனூப் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "பின் இருக்கையில் அமர்ந்திருந்த எனது மகனுக்கு இதில் பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் மூன்று தையல்கள் போடப்பட்டது. ரத்தமும் அதிகளவில் போன நிலையில், இப்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் எனது குழந்தை மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளான்" என்றார்.
அனூப்பின் மனைவி இது தொடர்பாகக் கூறுகையில், "அவர்களைப் பார்க்கவே பயமாக இருந்தது. அது பிஸியான ஏரியா.. ஆனாலும், அவர்கள் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் எங்களைத் தாக்கியுள்ளனர். எனது குழந்தை பயந்துவிட்டது. இப்போது மருத்துவமனையில் எனது குழந்தைக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது" என்றார். இந்தச் சம்பவம் குறித்து அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications