மகனை புதைத்த இடத்தில் கதறி அழுத தந்தை.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது! பெங்களூர் கூட்ட நெரிசல் கொடூரம்
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வென்றிருந்ததைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் தனது ஒரே மகனை இழந்த லட்சுமணன் என்ற தந்தை, தனது மகனின் கல்லறையில் படுத்துக் கொண்டு வேறு எங்கும் வர மாட்டேன் எனச் சொல்லிக் கதறி அழுத வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. கடந்த 18 ஆண்டுகளில் முதல்முறையாகப் பெங்களூர் ஐபிஎல் போட்டிகளை வென்ற நிலையில், அதைக் கொண்டாடப் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டது. இருப்பினும், அப்போது எதிர்பாராத விதமாக அங்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

11 பேர் பலி
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், 47 பேர் காயமடைந்தனர். வெற்றி கொண்டாட்டமாக இருக்க வேண்டிய இது கர்நாடக மாநிலத்தில் மிகப் பெரிய சோகமாக மாறியது. தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இந்த கூட்ட நெரிசலில் தனது மகனை இழந்த தந்தை ஒருவர் தனது மகனின் கல்லறையை அரவணைத்தபடி அழுத வீடியோ அனைவரையும் உலுக்கியுள்ளது. அந்த வீடியோவில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த 21 வயதான பூமிக் லட்சுமணின் தந்தை பி.டி.லட்சுமணன், ஹாசன் மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த கிராமத்தில் தனது மகனின் கல்லறையில் விழுந்து கதறி அழுகிறார்.
கதறி அழுத தந்தை
கல்லறையின் மீது அப்படியே தலை வைத்துப் படுத்துக்கொண்டு அவர், "என் மகனுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. நான் அவனுக்காக வாங்கிய இடத்திலேயே அவனுடைய கல்லறையைக் கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்று கதறுகிறார். மேலும், அங்கிருந்து வரவும் அவர் மறுத்துவிட்டார். அப்படியே அதே இடத்தில் படுத்துக் கொண்டு அழுதார்.
அப்போது அங்கிருந்த இருவர் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றனர். இருப்பினும், அவர் அங்கிருந்த வர மறுத்துவிட்டார். கண்ணீர்விட்டபடியே அவர், "நான் வேறு எங்கும் வர விரும்பவில்லை. நானும் இங்கேயே எனது மகனுடன் இருக்க விரும்புகிறேன்" என்று சொல்லிக் கதறி அழுதார். மேலும், தனது நிலை வேறு எந்தவொரு தந்தைக்கும் வந்துவிடக் கூடாது என்று அவர் வேதனைப்பட்டார்.
என்ன நடந்தது
கல்லூரியில் இறுதி ஆண்டு பொறியியல் மாணவரான பூமிக் ஒரு தீவிர ஆர்சிபி ரசிகர் ஆவார். 18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில், அந்த கொண்டாட்டத்தில் பங்கேற்கப் பூமிக்கும் சின்னசாமி ஸ்டேடியத்திற்கு சென்றார். அங்குக் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.
எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூட்டம் பல மடங்கு திரண்டது. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், அதில் மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். அதில் தான் பூமிக்கும் உயிரிழந்தார். முன்னதாக மகன் இறந்த துயரத்தைக் கேட்டுக் கண்ணீர்விட்ட லட்சுமணன் அப்போது செய்தியாளர்களிடம் பேசும் போது தனது மகனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யாமல் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பிரேத பரிசோதனை வேண்டாம்
கண்ணீரை அடக்க முடியாமல் பேசிய லட்சுமணன், "எனக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான், இப்போது அவனை இழந்துவிட்டேன். தயவு செய்து என் உடலைக் கொடுங்கள், பிரேதப் பரிசோதனை செய்து என் உடலைத் துண்டு துண்டாக வெட்டாதீர்கள். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எங்களை வந்து சந்திக்கலாம். ஆனால், இதனால் எனது மகன் திரும்ப வந்துவிட மாட்டான்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், ஒரு தந்தையின் தாங்க முடியாத துயரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications