"மெகா பிளான்!" கர்நாடகாவில் அதிருப்தியை சமாளிக்க பாஜகவின் பலே திட்டம்! பொம்மை தலை மேல தொங்கும் கத்தி
பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் எட்டு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மிகப் பெரிய மாற்றம் காத்திருக்கிறது.
Recommended Video
கர்நாடகாவில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதன் பின்னர் குமாரசாமி தலைமையில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது.
இருப்பினும், இந்த ஆட்சி சில மாதங்கள் மட்டுமே நீட்டித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் கட்சி மாறிய நிலையில், 2019 ஜூலையில் எடியூரப்பா கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார்.

கர்நாடகா
அதன் பின்னர் அங்குச் சுமுகமாகவே ஆட்சி சென்று கொண்டி இருந்தது. இருப்பினும், சில பாஜக நிர்வாகிகளுக்கு எடியூரப்பா செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக் கூறப்பட்டது. அப்போது தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராகக் கொண்டுவரப்பட்டார். ஆனால், பசவராஜ் பொம்மை பதவியேற்றது முதலே அவர் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்று தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது.

முதல்வர் மாற்றம்
இந்தப் பேச்சு சமீபத்தில் கொஞ்ச நாட்கள் ஓய்ந்து இருந்த நிலையில், இப்போது மீண்டும் கிளம்பி உள்ளது. எட்டு மாதங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அதைக் கருத்தில் வைத்தே இந்த மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவைப் பொறுத்தவரை அங்கு லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்கள் பிரிவினரின் மக்கள் தொகையே அதிகம். அங்கு லிங்காயத்துகள் அதிகபட்சமாக சுமார் 18 சதவிகிதம் உள்ளனர். இவர்கள் பாஜகவின் வாக்கு வங்கியாகவே பார்க்கப்படுகின்றனர்.

எடியூரப்பா
இதற்காகவே லிங்காயத்து பிரிவின் மூத்த தலைவரான எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதே, அதே சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மைக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. அதேநேரம் இப்போது பாஜகவின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான பார்லிமென்ட் வாரியத்தில் எடியூரப்பாவுக்கு இடம் கொடுக்கப்பட்டு உள்ளதால், முதல்வர் பதவியில் இருந்து பொம்மை நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பொம்மைக்கு பதிலாக யார்
பொம்மைக்கு பதிலாக, வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிடுகிறது. ஏனென்றால், கர்நாடகாவில் வொக்கலிகா மக்கள் தொகை மட்டும் சுமார் 15 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் ஜேடிஎஸ் கட்சிக்குச் செல்லும் கணிசமான வாக்குகள் தங்கள் வரும் என பாஜக நம்புகிறது. அதேநேரம் லிங்காயத் பிரிவினரை மகிழ்ச்சியாக வைத்திருக்க எடியூரப்பாவை பிரசாரத்தில் சிறப்பாகப் பயன்படுத்தவும் பாஜக பிளான் போடுகிறது.

ஆபத்தில் முடியலாம்
தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் போது, லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவது ஆபத்திலும் முடியலாம். ஏனென்றால், லிங்காயத்துகளின் வாக்குகளைக் கவரும் முயற்சியில் ஏற்கனவே காங்கிரஸ் இறங்கிவிட்டது. ராகுல் காந்தி சமீபத்தில் தான் லிங்காயத்து சமூகத்தின் மூத்த தலைவரை நேரில் சந்தித்து இருந்தார். லிங்காயத்து சமூகத்தினர் ஏற்கனவே எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிய போது, பாஜக மீது அதிருப்தி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தி அதிகரிப்பு
எடியூரப்பாவுக்கு பின் லிங்காயத்து சமூகத்தைப் பொம்மையே முதல்வர் பதவியில் நியமிக்கப்பட்டாலும், அவர் மீதான அதிருப்திகள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பொம்மை மீதான விமர்சனங்கள் அதிகரித்து உள்ளது. அவரது அரசு மீதான ஊழல் புகார்கள் உச்சத்தில் இருக்கிறது. மேலும், வகுப்புவாத வன்முறையைத் தடுக்க தவறியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. இதனால் அவர் மாற்றப்படும் வாய்ப்புகள் அதிகம்.

பாஜ தலைவர்
பசவராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கும்போதே, அவருக்கு ஆர்எஸ்எஸ் பின்புலம் இல்லை எனக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே சென்றது. இது தொடர்பாக பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், "பசவராஜ் பொம்மை செயல்பாடுகளில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. அதேநேரம் எடியூரப்பா மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் கலந்து ஆலோசித்த பிறகே பொம்மையைப் பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்தார்.

என்ன நடக்கும்
எனவே, தற்போதைய சூழலில் அவர் மாற்றப்படும் வாய்ப்புகள் குறைவு! டெல்லி தலைமை அவரை மாற்ற விரும்பினாலும் இப்போது அதைச் செய்ய மாட்டார்கள். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அவரை மாற்றுவது இமேஜை பாதிக்கும். அதற்குப் பதிலாகக் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications