பெங்களூருவில் மின்னும் விநாயகர்.. ரூ.14 லட்சம் செலவில் அமெரிக்கன் வைரம்! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?
பெங்களூரு: பெங்களூரு மில்க் காலனியில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்காக நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலையை பார்த்தால், அப்படியே நம்முடைய கண்கள் அந்த சிலை மீதே நின்றுவிடும். காரணம், சிலை முழுவதும் மின்னும் ஆயிரக்கணக்கான கற்கள்.. ரூ.14 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகரின் பின்னால் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் இருக்கிறது..!!
கர்நாடகா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டியுள்ள நிலையில், பெங்களூரு மல்லேசுவரம் மில்க் காலனியிலும் விழா பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. இங்கு 'சுவஸ்திக் யுவகரா சங்கம்' சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைதான் தற்போது பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

பெங்களூருவில் மின்னும் விநாயகர்
காரணம், இந்த விழாவுக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஏகதந்த கணபதி சிலையின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.14 லட்சம் ஆகும்.. 5 அடி உயரம் கொண்ட இந்த விநாயகர் சிலை சுமார் 700 கிலோ எடை கொண்டது. சிலையின் மீது ஆயிரக்கணக்கான அமெரிக்கன் டைமண்ட்கள், முத்துக்கள், பவளங்கள் மற்றும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வெளிச்சம் படும்போது ஒவ்வொரு கல்லும் மின்னுவதால், விநாயகரே ஜொலிப்பது போல காட்சி தருகிறார்.
இந்த சிலையை உருவாக்கும் பணி சாதாரணமாக நடந்துவிடவில்லை... மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் சுமார் 3 மாதங்கள் இரவு பகலாக உழைத்து இந்த சிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.. ஒவ்வொரு கல்லையும் கவனமாக பொருத்தி, விநாயகரின் உருவ அமைப்பில் எந்த குறையும் வந்துவிடாதபடி பார்த்து பார்த்து, சிலையை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.
அமெரிக்கன் வைரக்கற்கள்
ஆனால் இங்கேதான் ஒரு முக்கியமான ஹைலைட் உள்ளது.. சிலையில் பயன்படுத்தப்பட்டிருப்பது நிஜமான வைரம் கிடையாதாம்.. பொதுவாக இதனை "அமெரிக்கன் டைமண்ட்" என்று சொல்வார்கள். ஆனால், இப்படி அழைக்கப்படும் அமெரிக்கன் வைரக்கற்கள் மொத்தமும் செயற்கையானது..
ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் கியூபிக் சிர்கோனியா என்ற வகையைச் சேர்ந்தவை. பார்ப்பதற்கு அப்படியே வைரம் போலவே பளபளப்பாக இருப்பதால் அவை அமெரிக்கன் டைமண்ட் என்று அழைக்கப்படுகின்றன.
குவியும் பக்தர்கள்
சிலைதான் இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறதே என்று பார்த்தால்.. விநாயகர் வீற்றிருக்கும் மண்டபமும் சும்மா இல்லை...படு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.. ஆந்திரப் பிரதேசத்தில் உலகப் புகழ்பெற்ற லேபாக்ஷி கோயிலின் பழமையான கட்டிடக் கலை மற்றும் சிற்ப அமைப்பை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் இந்த மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக மட்டும் சுமார் ரூ.16 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள்.. மண்டபத்தைப் பார்த்தாலே லேபாக்ஷி கோயிலின் கம்பீரத்தை பெங்களூருக்கே கொண்டு வந்தது போல இருக்கிறது.
சுவஸ்திக் யுவகரா சங்கத்தை பொறுத்தவரை, இந்த விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒரு நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. மில்க் காலனியில் கடந்த 41 ஆண்டுகளாக தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி விழாவை அந்த அமைப்பு நடத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான கான்செப்டில் விநாயகரை பிரதிஷ்டை செய்து வரும் நிலையில், 41-வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த முறை அமெரிக்கன் டைமண்ட் விநாயகரை அமைத்துள்ளனர்.
அமெரிக்கன் வைரம் கணபதி
இந்த ஆண்டு விழா மொத்தம் 9 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் சிறப்பு பூஜைகள் மட்டுமல்லாமல் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மில்க் காலனிக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள்.. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மின்னும் கற்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த விநாயகரை தரிசித்து மகிழ்கிறார்கள்..
இதனால் கடந்த சில நாட்களாகவே, இணையம் முழுக்க இந்த பெங்களூரு அமெரிக்கன் டைமண்ட் விநாயகர்தான் டிரெண்டாகி கொண்டிருக்கிறார்..!!


Click it and Unblock the Notifications
