மின் வயரில் அமர்ந்த ரூ.2.5 லட்சம் கிளி.. காப்பாற்ற போன தொழிலதிபருக்கு நேர்ந்த கதி.. உயிரே போச்சு
பெங்களூர்: வெளிநாட்டு இனத்தை சேர்ந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கிளி வீட்டில் இருந்து பறந்து மின்வயரில் அமர்ந்தது. இதையடுத்து, அந்த கிளியை மீட்க முயன்ற தொழிலதிபர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
கர்நாடகாவின் மண்டியா மாவட்டம் நாமங்களாவை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 32). இவர் பெங்களூரு கிரிநகரில் அருகே வீரபத்ரா லே-அவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது உறவினர் லிகிதாவின் வீட்டில் வசித்து வந்தார்.

சுயதொழில் செய்து வந்த அருண் குமார் வீட்டில் வெளிநாட்டு இனத்தை சேர்ந்த Macaw ரக கிளியை வளர்ந்து வந்தார். இது தென்அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது.
விலை மதிப்பு மிக்க இந்த கிளியை அவர் வீட்டில் பத்திரமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் தான் நேற்று காலையில் கிளி வீட்டில் இருந்து பறந்து சென்று விட்டது. பின்னர் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் செல்லும் உயர் அழுத்த மின் கோபுரத்தின் கம்பியில் அந்த கிளி அமர்ந்தது. மின்சாரம் தாக்கி கிளி செத்துவிடுமோ என்று அருண் குமார் நினைத்தார்.
இதனால் கிளியை காப்பாற்ற அவர் நினைத்தார். வீட்டில் இருந்த இரும்பு குழாயை எடுத்து சுவர் மீது ஏறி உயர் மின் அழுத்த கம்பியில் இருந்த கிளியை விரட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து அருண் குமார் 8 அடி உயர சுற்றுச்சுவரில் இருந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அருண்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கிளி அமர்ந்திருந்த உயர் அழுத்த மின்கம்பி 66 ஆயிரம் மெகாவாட் கொண்டது. அதன் அருகே இரும்பு குழாயை அருண்குமார் கொண்டு சென்றதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications