பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமில்லையா? என்னென்ன சிரமங்கள் இதோ லிஸ்ட்.. புது ஐடியா
பெங்களூர்: தமிழ்நாடு - கர்நாடகா இடையே பெங்களூர் - ஓசூர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க இருமாநிலங்களும் மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப ரீதியாக சில சிக்கல்கள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அது என்னென்ன? இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. அதேபோல் கர்நாடகாவில் பெங்களூர் நகரில் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தான், கர்நாடகா - தமிழ்நாட்டை இணைக்கும் வகையில் பெங்களூர் பொம்மசந்திராவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் இயக்க இருமாநில அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதன்படி பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வரையிலான திட்டத்துக்கும் கர்நாடகா அரசும், அத்திபள்ளியில் இருந்து ஓசூர் வரையிலான திட்டத்துக்கும் தமிழக அரசும் பொறுப்பேற்று இதனை நிறைவேற்ற தயாராகி வருகிறது.
சமீபத்தில் பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனம் (BMRCL) கர்நாடகா அரசிடம் சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அதில், ''பெங்களூர் மஞ்சள் வழித்தட மெட்ரோ பாதை பொம்மச்சந்திரா வரை செல்கிறது. இதனை பொம்மசந்திராவில் இருந்து அத்திப்பள்ளி வரை 10.5 கிலோமீட்டர் தொலைவுக்கு 9 ரயில் நிலையங்களுடன் விரிவாக்கம் செய்யலாம்.
இந்த வழித்தடத்தில் முதல் ரயில் நிறுத்தமாக நாராயணா இன்ஸ்டிடியூட் ஆஃப்கார்டியாக் சயின்சஸ், பிறகு சந்தாபுரா சர்க்கிள், ஹலே சந்தாபுரா, திருமாகொண்டனஹள்ளி, பாலகாரனஹள்ளி, அத்திப்பள்ளி தொழிற்பேட்டை, யாதவனஹள்ளி, அத்திப்பள்ளி, அத்திப்பள்ளி டெர்மினல் உள்ளிட்ட ரயில் நிலையங்களை அமைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. என்று 9 ரயில் நிறுத்தங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையை ஓசூர் ரோட்டிற்கு வலதுபுறம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிறுத்தங்கள் நடைமேம்பாலம், நடை சுரங்கப்பாதைகள் வழியாக இணைக்கப்பட உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
விரைவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்த திட்டத்தில் சில சிரமங்கள், தொழில்நுட்பரீதியான பிரச்சனைகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதான் இந்த திட்டத்திற்கு பெரும் சவாலாக உள்ளன. அதாவது பெங்களூர் மெட்ரோ ரயில்களை இயக்க 750 volts Direct Current பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இந்த மின்சாரம் தண்டவாளத்துக்கு நடுவே கீழ்புறத்தில் இருந்து வழங்கப்படும். ஆனால் சென்னைமெட்ரோ ரயில் திட்டம் 25 kilovolts Alternating Current பயன்படுத்தப்பட்டு வருவதோடு, மெட்ரோ ரயிலுக்கான மின்சப்ளை ரயிலின் மேல்புறத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இதனால் இரு மாநிலங்களின் மெட்ரோ ரயில்களையும் இயக்குவதில் சிக்கல் உள்ளது.
அதுமட்டுமின்றி இருமாநிலங்கள் இடையே மெட்ரோ ரயில் சேவை இயக்கும்போது அதில் கிடைக்கும் வருமானத்தை பிரித்து கொள்வது எப்படி? என்பதில் பிரச்சனை உள்ளது. அதேபோல் பெங்களூர் மெட்ரோ ரயில் 6 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை மெட்ரோ ரயில்கள் 3 பெட்டியுடன் தான் இயக்கப்படுகிறது.
இதனால் இந்த பிரச்சனைகளை சரிசெய்வது தொடர்பாக இருமாநிலங்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஓசூரில் இருந்து அத்திப்பள்ளி வரை சென்னை மெட்ரோ திட்டம் போல் தமிழக அரசு சார்பில் தனித்திட்டத்தையும், அத்திப்பள்ளியில் இருந்து பொம்மச்சந்திரா வரை பெங்களூர் மெட்ரோ ஸ்டைலில் தனித்திட்டத்தையும் செயல்படுத்துவதும், பிறகு இருமாநில பயணிகளும் அத்திப்பள்ளியில் இறங்கி மெட்ரோ ரயிலி்ல மாறி செல்லும் வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கலாம்என்று கூறப்படுகிறது. அதாவது இருமாநிலங்கள் இடையே நேரடியாக மெட்ரோ ரயில் சேவை இன்றி அத்திப்பள்ளி மெட்ரோ ஸ்டேஷனில் பயணிகள் இறங்கி இன்னொரு ரயிலில் ஏறி பயணிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாமா? என்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications
