செம போக்குவரத்து நெரிசல்! இது சரிப்பட்டு வராது! திறந்த 2 மாதத்தில் பெங்களூரில் மூடப்பட்ட பிரபல மால்
பெங்களூர்; பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பீனிக்ஸ் மால் ஆஃப் ஏசியா நிறுவனத்தை அடுத்த 15 நாட்களுக்கு மூடி வைக்குமாறு பெங்களூரு காவல்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட இந்த மால், டிசம்பர் 31 முதல் ஜனவரி 15 வரை செயல்படாது என்று மாநகர காவல் ஆணையர் பி தயானந்தா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாலில் போதிய வாகன நிறுத்தம் இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. புத்தாண்டு மற்றும் நீண்ட வார இறுதி நாட்கள் வருவதால், பெங்களூரு காவல்துறை ஹெப்பல் பகுதியில் அதிக நெரிசல்களை எதிர்பார்க்கிறது, ஏற்கனவே சாதாரண நாளில் இங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மால் திறந்து இருந்தால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அதை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

திறந்ததில் இருந்தே நெரிசல்: இந்த மாலை திறந்ததில் இருந்தே கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அந்த பகுதியில் பொதுவாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. ஆனால் மால் திறக்கப்பட்டதில் இருந்து கடுமையான நெரிசல் நிலவி வருகிறது.
என்ன காரணம்: பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா, மாலுக்கு நேரில் சென்று பார்வையிட்டதாகவும், அது போக்குவரத்து சிக்கல்களின் முக்கியமான காரணமாக இந்த மால் மாறியிருப்பதைக் கண்டறிந்ததாகவும் கூறினார்.
அவர் கூறுகையில், "இந்த மால் 12 மாடி கட்டிடம் (2 அடித்தள தளங்கள் உட்பட) தரை தளத்தில் இருந்து 3வது தளம் வரை மொத்தம் 86421 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. ஆனால் மாலில் 2324 கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த 2 அடித்தளங்கள் மட்டுமே உள்ளன. பார்க்கிங் குறைவாக உள்ளது. இந்த வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், கடைவீதிக்கு வரும் பொதுமக்களின் வாகனங்கள் உள்ளே செல்ல முடியாமல் கடை வாசலில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதனால், பிரதான சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகன டிராபிக் நீண்ட நேரம் நிற்கிறது. மாலில் குறைந்தபட்சம் 10,000 கார்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்ய காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன் 15 நாட்களுக்கு இந்த மாலை மூட வேண்டும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மற்ற பிரச்சனைகள்: பார்க்கிங் வசதிகள் மட்டுமின்றி, மாலில் அதிக அளவு எக்ஸாஸ்ட் சவுண்ட் ஸ்பீக்கர்கள் இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக போலீசார் தெரிவித்தனர். போலீஸ் வெளியிட்டுள்ள ஆர்டரில் "மால் எக்ஸாஸ்ட் ப்ளோயர்ஸ் அதிக அளவு ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது, மேலும் இரவில் தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மற்றும் மாணவர்கள் படிப்பதில் சிரமம் இருப்பதாக குடியிருப்பாளர்களால் பல புகார்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதுவும் ஒரு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட ஒலி மாசுபாடு அதிகமாக இருப்பதாகவும், ஒலி மாசுபாட்டைத் தடுக்க மால் பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாலில் சத்தம் குறைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுவும் அங்கே மால் மூடப்பட காரணம் என்கிறார்கள்.
ஆசியாவின் ஃபீனிக்ஸ் மால் கடந்த வாரம் அக்டோபரில் மிகுந்த திறக்கப்பட்டது, இது நாட்டின் மிகப்பெரிய மால்களில் ஒன்றாகும். புதிய மால் திறக்கப்பட்டதில் இருந்தே வடக்கு பெங்களூரு மக்கள் அங்கு குவிந்துள்ளனர். சமீபத்தில் நீண்ட வார இறுதியில் போக்குவரத்து நெரிசல்களுக்கு காரணமாக இந்த மால் மாறியது. இந்த நிலையில்தான் இந்த மால் மூடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications