பட்டியலின மக்களுக்கான உள்ஒதுக்கீடு.. நாளை பெங்களூரில் எதிர்ப்பு கருத்தரங்கம்! பொதுமக்களுக்கு அழைப்பு
பெங்களூர்: பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வும், அதனை தொடர்ந்து பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தரங்கம் நாளை ( 13.10.2024 ) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பண்டிதர் பதிப்பகத்தின் நிர்வாகி அருள் முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,”
கடந்த ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் பட்டியலினத்தவரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து உள் ஒதுக்கீடு வழங்கலாம்.

அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பட்டியல் பிரிவினரை பிரித்தாளும் சூழ்ச்சியாக இருக்கிறது. பட்டியல் பிரிவில் உள்ள பல்வேறு சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டின் நன்மை கிடைப்பதை தடுக்கும் வகையிலும் இருக்கிறது.
எனவே இதனை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் "சமூக அநீதிக்கு வழிவகுக்கும் பட்டியலின உள் ஒதுக்கீடு'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துகிறோம். புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து கருத்தரங்கம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு அல்சூரில் உள்ள பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் தொடங்குகிறது.
இதில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.ராசன், கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே.டி.இளங்கோவன், முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் எஸ்.டி.குமார், பேரா.சி.லட்சுமணன், இந்திய குடியரசு கட்சியின் பொதுச்செயலாளர் மங்கா பிள்ளை, அறிவு சமூகம் அமைப்பின் தலைவர் தமிழ் முதல்வர்,கவிஞர் தமிழடியான், வணங்காமுடி இயக்கத்தின் தலைவர் அ.தமிழ் முரசு,அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்து பிரதீபன், எழுத்தாளர் அருள் முத்துக்குமரன், சமூக செயற்பாட்டாளர்கள் நலங்கிள்ளி, தனஞ்செழியன், பத்திரிகையாளர் இரா.வினோத் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
பாவலர் மகிமை தாஸ் எழுச்சி பாடல்களை பாட, சமூக செயற்பாட்டாளர் மே.க.பிரவீன் நெறியாளுகை செய்கிறார். மேலதிக தகவல்களுக்கு 9886823612 /9787494632/ 8675188609/ 8072917363 ஆகிய தொலைப்பேசி எண்களை தொடர்புக்கொள்ளலாம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications