எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் இனி பைக், ஆட்டோ ஓடாது.. பெங்களூர் டிராஃபிக் போலீஸ் கட்டுப்பாடு!
பெங்களூர்: பெங்களூர் நகரிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி, சில்க் போர்டு உள்ளிட்ட முக்கியமான ஐந்து மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்டச் சாலைகளில் குறிப்பிட்ட வகை வாகனங்களின் இயக்கத்திற்கு பெங்களூர் போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரம், போக்குவரத்து நெரிசலுக்கும் பெயர் பெற்றது. சில கி.மீ தூரத்தைக் கடக்கவே மணிக்கணக்கில் ஆகக்கூடிய அளவுக்கு பெங்களுர் வாகன நெரிசல் பிரசத்தி பெற்றது. பீக் ஹவர்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பெங்களூர் போக்குவரத்து கட்டுப்பாடு
அந்தவகையில், பெங்களூர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், முக்கியமான ஐந்து மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்டச் சாலைகளில் குறிப்பிட்ட வகை வாகனங்களின் இயக்கத்திற்கு பெங்களூர் போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் மைசூர் சாலையில் உள்ள பிஜிஎஸ் (சிர்சி சர்க்கிள்) மேம்பாலம் , பீன்யா மேம்பாலம், எலக்ட்ரானிக்ஸ் சிட்டி உயர்மட்ட விரைவுச்சாலை, சில்க் போர்டு மற்றும் ராகிகுடா இடையே உள்ள மெட்ரோ இரட்டை அடுக்கு மேம்பாலம், மற்றும் சஞ்சீவ்நகர் கிராஸ் மற்றும் வித்யாஷில்ப் சந்திப்பு இடையே உள்ள பல்லாரி சாலை (விமான நிலைய சாலை) மேம்பாலம் ஆகியவற்றிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் சிட்டி
எலக்ட்ரானிக் சிட்டி மேம்பால விரைவுச்சாலையில், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக, நடுத்தர மற்றும் இலகுரக என அனைத்து வகை சரக்கு வாகனங்களும் தடை செய்யப்படும். இருசக்கர வாகனங்கள், பயணிகள் ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் மூன்று சக்கர சரக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் 24 மணி நேரமும் தடை செய்யப்படும். ஐ.டி ஊழியர்கள் ஏராளமானோர் பைக்குகளில் இந்த வழியாகப் பயணித்து வரும் நிலையில், அவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டபுள் டெக்கர் மேம்பாலத்தில் கனரக சரக்கு வாகனங்களுக்கு 24 மணி நேரத் தடை விதிக்கப்படும். சிர்சி சர்க்கிள், பீன்யா, டபுள் டெக்கர் மற்றும் விமான நிலையச் சாலை மேம்பாலங்களில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் செப்டம்பர் 4 முதல் அமலுக்கு வரும். எலெக்ட்ரானிக்ஸ் சிட்டி விரைவுச்சாலையில் செப்டம்பர் 11 முதல் இந்த கட்டுப்பாடுகள் செயல்பாட்டுக்கு வரும்.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு
சிர்சி சர்க்கிள் மேம்பாலத்தில், கனரக சரக்கு வாகனங்களுக்கு 24 மணி நேரமும் தடை விதிக்கப்படும். மூன்று சக்கர சரக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட மற்ற சரக்கு வாகனங்களுக்கு, காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
பீன்யா மேம்பாலத்தில், பயணிகள் ஆட்டோக்கள் மற்றும் மூன்று சக்கர சரக்கு ஆட்டோக்களுக்கு 24 மணி நேரமும் தடை விதிக்கப்படும். காலை மற்றும் மாலை பீக் ஹவர் நேரங்களில் கனரக மற்றும் நடுத்தர சரக்கு வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஏர்போர்ட் சாலையின் மேம்பாலப் பகுதியில், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு 24 மணி நேரமும் தடை விதிக்கப்படும். அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டுப்பாடு விதிக்கப்படும்.
என்ன காரணம்?
பெங்களூரில் உள்ள மேம்பாலங்களில் வாகனங்களின் வேக மாறுபாடுகளால் ஏற்படும் விபத்துகள் குறித்த ஆய்வைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சாலை வடிவமைப்பு மற்றும் அகலம், விபத்துகளின் தீவிரம், வாகனப் பழுதுகள், நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அவசரகால போக்குவரத்து மேலாண்மை, மற்றும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
