பேசுறது ஜக்கி வாசுதேவ்தான்னு செக் பண்ணிக்கோங்க.. ரூ.3.75 கோடி இழந்த பெங்களூர் பெண்
பெங்களூர்: Deepfake வீடியோ தற்போது பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதுபற்றி அறிந்து பொதுமக்கள் உஷாராக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் பெரும் பிரச்சனையை சந்திக்கலாம். அந்த வகையில் தான் தற்போது ஈசா அறக்கட்டளையின் தலைவரான சத்குரு ஜக்கி வாசுதேவின் Deepfake வீடியோவால் பெங்களூரை சேர்ந்த 57 வயது பெண் ஒருவர் ரூ.3.75 கோடியை இழந்துள்ளார்.
பெங்களூர் சிவி ராமன் நகரில் வசித்து வருபவர் 57 வயது பெண். இவர் இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் வீடியோ ஒன்றை பார்த்தார். அப்போது ஈஷா அறக்கட்டளையின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் குரலில் முதலீடு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.

குறைந்தப்பட்சம் அதாவது 250 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22 ஆயிரம்) முதலீடு செய்தாலே அதிகப்படியான பணத்தை திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அந்த பெண் முதலீடு செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த லிங்கை கிளிக் செய்தார். அது பெயர், இ-மெயில் மற்றும் செல்போன் எண்களை கேட்டது. அவர் பதிவு செய்தார். அதன்பிறகு வாலித் பி என்பவர் அவரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நிறுவனத்தின் பெயரை Mirrox என தெரிவித்து கொண்டார். அதுமட்டுமின்றி அந்த பெண்ணை ஒரு வாட்ஸ்அப் குழுவில் சேர்த்துள்ளார். அதில் 100 பேர் வரை உறுப்பினர்களாக இருந்துள்ளனர். அதன்பிறகு அந்த பெண்ணை சில இணையதளங்கள் மற்றும் Mirrox ஸ்டாக் டிரேடிங் செயலியை டவுன்லோட் செய்ய கூறியுள்ளனர்.
மேலும் வாலித் ஜூம் கால் மூலமாக பயிற்சி என்ற பெயரில் சில விவரங்களை கூறியுள்ளார். அதேபோல் மைக்கேல் சி என்பவரும் பயிற்சி கொண்டுள்ளாார். மேலும் போலியாக லாபமடைந்ததாக கூறிய ஸ்கிரின்ஷாட் உள்பட பல விவரங்களை அவர்கள் அந்த பெண்ணிடம் காண்பித்துள்ளனர். இதனால் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த பெண், ரூ.3.75 கோடியை அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தினார்
ஆனால் அவருக்கு பணம் எதுவும் திரும்ப வரவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. முதலீடு செய்த ரூ.3.75 கோடியை திரும்ப தரும்படி கூறினார். ஆனால் அந்த நபர்கள் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அப்போது தான் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதைஉணர்ந்தார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் சார்பில் பெங்களூர் கிழக்கு சிஇஎன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு Deepfake வீடியோ பற்றி எந்த விஷயமும் தெரியவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி மோசடி நபர்கள் அவரை ஏமாற்றி பணத்தை பறித்துள்ளது தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில் அந்த பெண் டீப்ஃபேக் வீடியோவால் ஏமாற்றமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஏஐ மூலமாக சத்குரு வாசுதேவின் டீப்ஃபேக் வீடியோவை உருவாக்கி மோசடிதாரர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.
இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஜூன் மாதம் ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜக்கி வாசுதேவின் அடையாளத்தை பயன்படுத்தி Deepfake வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதை எதிர்த்து அந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications