பெங்களூர் சாலையில் திடீரென பாட்டு பாடிய எட் ஷீரன்! மைக் வயரை பிடுங்கிய போலீசார்.. என்ன நடந்தது?
பெங்களூர்: பிரிட்டனை சேர்ந்த பாடகர் எட் ஷீரன் பெங்களூர் சர்ஷ் ஸ்ட்ரீட் பகுதியில் திடீரென சாலையோரம் இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது அங்கு வந்த போலீசார் உரிய அனுமதியின்றி இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது எனக் கூறி எட் ஷீரனை பாட விடாமல் தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாடகர் எட் ஷீரன் பெங்களூரில் இன்று சாலையோரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார். மக்கள் நடமாட்டம் மிகுந்த சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் எட் ஷீரன் உற்சாகத்துடன் பாடலை பாட தொடங்கிய நிலையில் அங்கு வந்த போலீசார் இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். மேலும் மைக் வயர்களையும் பிடுங்கினர்.

அனுமதியின்றி சாலையோரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தியதாக போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தனர். ஆனால், உரிய அனுமதி பெற்றே சாலையோர இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக எட் ஷீரன் டீம் கூறியது. ஆனால், அனுமதி கோரப்பட்டதாகவும் போலீசார் அனுமதி மறுத்ததாகவும் விளக்கம் அளித்தனர். இது தொடர்பாக வீடியோ காட்சிகள் தற்பொது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான எட் ஷீரன் சர்வதேச அளவில் புகழ் பெற்றவராக உள்ளார். இவரது முதல் ஆல்பமான 'பிளஸ்' 2011 ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு பல ஆல்பங்களை வெளியிட்டுள்ள எட் ஷீரனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். எட் ஷீரனின் மல்டிபிள், டிவைட் உள்ளிட்ட ஆல்பங்கள் பிரம்மாண்ட வெற்றி பெற்றன. இதன்பிறகு, உலகம் முழுவதும் பயணித்து இசை நிகழ்ச்சிகளை எட் ஷீரன் நடத்தி வருகிறார்.
ஐதரபாத்தை தொடர்ந்து சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை கடந்த வாரம் புதன் கிழமை நடத்தினார். இதில், இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமானும் கலந்து கொண்டார். வரும் 15 ஆம் தேதி வரை எட் ஷீரன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் அவரது நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் தான் பெங்களூரில் இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில் தான் இன்று பெங்களூரில் சாலையோரத்தில் அவர் நடத்திய இசை நிகழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கையில் கிடாருடன் Shape of you என்ற பாடலை பாடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்தவர்களும் எட் ஷீரனை அடையாளம் கண்டு உற்சாகம் அடைந்தனர். அடுத்த சில வினாடிகளில் வந்த போலீசார் மைக்குகளை கழட்டினர். இதையடுத்து அவர் அங்கு பாடாமல் கிளம்பி சென்றார்.












Click it and Unblock the Notifications