தமிழகத்திற்கு 1 டிஎம்சி தண்ணீர் தர முடியாது.. அடம் பிடிக்கும் கர்நாடகா.. 8000 கனஅடி திறக்க ஒப்புதல்
பெங்களூர்: தமிழகத்திற்கு நாளை முதல் தினந்தோறும் 8000 கனஅடி காவிரி நீரை திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் இறுதி வரை 1 டிஎம்சி தண்ணீர் வழங்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தினந்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
தமிழகத்திற்கு வரும் 15 ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது என்று முடிவு எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று அனைத்து கட்சி கூட்டம் நடக்கும் என்றும் சித்தராமையா தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று பெங்களூர் விதான்பவான் சவானில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெங்களூர் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும் நீர்ப்பாசன துறை அமைச்சருமான டிகே சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வாதாட கூடிய வழக்கறிஞர் மோகன் கட்கரி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கர்நாடகாவில் நீர் குறைவாக உள்ளது. 28 சதவிகிதம் குறைவாக இருக்கிறது. தற்போது அணைகளில் உள்ள நீர்மட்டம் குறித்தும் தெரிவித்தனர். குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் இப்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வழங்கினால் பிப்ரவரி மாதத்திற்குள் கர்நாடகாவில் உள்ள மக்களுக்கு குடிநீருக்கும், விவசாய பாசனத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, கபினி அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் கேஆர்எஸ் அணைக்கும் இன்று நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நாளை முதல் 31 ஆம் தேதி வரை நாள்தோறும் தமிழகத்திற்கு 8000 கனஅடி நீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications