நாளை கர்நாடகா பந்த்.. யார் எதிர்த்தாலும் முழு அடைப்பு நடத்துவோம் - வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
பெங்களூர்: காவிரியில் கர்நாடகாவின் உரிமையை நிலைநாட்ட நாளை கட்டாயம் மாநிலம் முழுவதும் பந்த் போராட்டம் நடத்தியே தீருவோம். கர்நாடகா பந்த்துக்கு யார் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் கூட இந்த முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவோம் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி நதி நீர் பங்கீடு செய்வதில் பிரச்சனை உள்ளது. நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் தமிழக, கர்நாடகா பிரதிநிதிகள் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுபற்றி கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கூறுகையில், ''கர்நாடகா அணைகளில் உள்ள நீரின் அளவை அளவீடு செய்த பிறகு தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்'' என்றார். அதேவேளையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நேற்றைய உத்தரவை கண்டித்து மண்டியா மாவட்டத்தில் நேற்று மாலையிலேயே விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே தான் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்தும் கர்நாடகாவில் ஆகஸ்ட் 13ம் தேதி முழு அடைப்பு (பந்த்) நடத்தப்படும் என்று கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் தான் நாளை நடக்கும் கர்நாடகா பந்த் போராட்டத்துக்கு வாட்டாள் நாகராஜ் பல்வேறு அமைப்பினர்களிடம் ஆதரவு கோரினார். முதலில் ஏராளமான அமைப்பினர் ஆதரவு கோரினர்.
ஆனால் சமீபத்தில் பெய்த கனமழையால் அணைகளில் தண்ணீர் இருப்பதால் பந்த் தேவையில்லை என்று பல்வேறு அமைப்பினர் தங்களின் ஆதரவை வாபஸ் வாங்கினர். இதனால் நாளை கர்நாடகாவில் பந்த் நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி வாட்டாள் நாகராஜ் விளக்கம் அளித்தள்ளார். இதுபற்றி வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளதாவது:
''கர்நாடகா பந்த் நாளை கட்டாயமாக நடக்கும். இந்த பந்த் போராட்டத்துக்கு யார் ஆதரவு அளித்தாலும், யார் ஆதரவு அளிக்காவிட்டாலும் முழு அடைப்பு போராட்டம் கட்டாயம் நடத்தப்படும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் உரிமையை நிலைநாட்ட இந்த பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்டித்தும், காவிரி விஷயத்தில் அலட்சியம் காட்டும் கர்நாடகா அரசை கண்டித்தும் இந்த பந்த் போராட்டம் நடத்தப்படும். நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடத்தப்படும்'' என்று கூறியுள்ளார்.
கர்நாடகா பந்த் நாளை நிச்சயம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் கூறியிருந்தாலும் கூட பல்வேறு கன்னட அமைப்பினர், தனியார் பள்ளிகள் சங்கங்கங்கள், கன்னட திரைப்பட வர்த்தக சபை, ஹோட்டல் சங்கங்கள், கன்னட ரக்ஷன வேதிகே (கேஆர்வி) பிரவீன் ஷெட்டி, சிவராமேகவுடா பிரிவு, தனியார் போக்குவரத்து கூட்டமைப்பினர் உள்பட பல அமைப்பினர் நாளைய பந்த் போராட்டத்துக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். இதனால் நாளை கர்நாடகாவில் பந்த் எப்படி நடக்கும்? மொத்த கர்நாடகாவும் முடங்குமா? இல்லாவிட்டால் வாட்டாள் நாகராஜ் தலைமையிலானவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துவார்களா? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
அதேபோல் கர்நாடகா அரசு சாலை போக்குவரத்து கழகம் (கேஎஸ்ஆர்டிசி) பஸ்கள், பெங்களூர் மாநகர அரசு போக்குவரத்து கழகம் (பிஎம்டிசி) பஸ்கள், மெட்ரோ ரயில்கள், தனியார் வாகனங்கள் உள்ளிட்டவை வழக்கம்போல் இயங்குமா? இயங்காதா? பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
