“மெர்சலாகுதே..” புதிய வீடியோ அனுப்பி குஷியாக்கிய சந்திரயான் 3! வெண்ணிலாவின் கரடு முரடான பக்கம்
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வீடியோவை அங்கு பதிவு செய்து இஸ்ரோவுக்கு அனுப்பி உள்ளது.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் விண்கலம் அனுப்பி சாதித்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அதற்கு முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டில் சந்திராயன் 1 விண்கலத்தை நிலவிற்கு இஸ்ரோ அனுப்பியது. நிலவில் இருந்து அது எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் வாயிலாக நிலவில் நீர் இருக்கும் சுவடுகள் தெரிந்தது.

அதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. ஆனால் அது தரையிறங்கும் சமயத்தில் ரோவர் கருவி வேகமாக நிலவில் மோதி வெடித்து சிதறியது. இருப்பினும் அதன் ஆர்பிட்டர் பல்வேறு தகவல்களை தொடர்ந்து அனுப்பி சந்திரயான் 3 திட்டத்துக்கும் உதவியது.
விடா முயற்சியாக போராடி கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான் 3 ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது.
அதன் பின்னர் நிலவின் ஆர்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3 பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றி, கடந்த 23 ஆம் தேதி மாலை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் விண்கலத்தை நிறுவிய 4 வது நாடு, நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்து இருக்கிறது.
நிலவை தொட்டவுடன் விக்ரம் லேண்டர் - பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்ததுடன் மெசேஜையும் அனுப்பியது. அதை தொடர்ந்து மறுநாள் மாலை முழுமையாக விக்ரம் லேண்டரை விட்டு பிரிந்து சென்று ரோவர் ஆய்வை தொடங்கியது.
லேண்டரில் உள்ள chaSTE, ILSA, RAMBHA ஆகியவற்றுடன் இது இயக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. நிலவை விக்ரம் லேண்டர் தொடும்போது அதில் இருந்த கேமரா எடுத்து அனுப்பிய வீடியோவையும், புகைப்படங்களையும் இஸ்ரோ வியாழன் அன்று வெளியிட்டு உள்ளது. 2 நிமிடங்கள் 13 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நிலவின் குண்டும் குழியுமான மேற்பரப்பு அழகாக தெரிந்தது.
தொடர்ந்து நிலவின் மேற்பரப்பை 14 நாட்கள் சுற்றி வரும் ரோவர் மண் தன்மை, வளி மண்டலம் போன்றவை பற்றி ஆய்வு செய்கிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வீடியோவை ரோவர் இஸ்ரோவுக்கு அனுப்பி உள்ளது. அதை ட்விட்டரில் இஸ்ரோ பகிர்ந்து இருக்கிறது. அதில் நிலவின் தென் துருவத்தின் கரடுமுரடான மேற்பரப்பு தெளிவாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications