எடியூரப்பாவிற்கு நான்கு முறை ஆட்டம் காட்டிய முதல்வர் நாற்காலி - சகட யோகம் கொடுத்த சங்கடம்
கர்நாடகா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா தனது பதவிக்காலத்தை ஒரு முறை கூட முழுமையாக அனுபவிக்கவில்லை இதற்குக் காரணம் அவரது ஜாதகத்தில் உள்ள சகட யோகம்தான்.
பெங்களூரு: சகட யோகம் எப்போதுமே ஒருவரை ஒரு இடத்தில் நிலையாக இருக்க விடாது. கர்நாடகா முதல்வராக இருந்து தற்போது ராஜினாமா செய்துள்ள எடியூரப்பாவின் ஜாதகத்திலும் இந்த யோகம் இருப்பதனால்தான் அவரால் நிலையாக ஐந்து ஆண்டு காலம் முதல்வராக ஒருமுறை கூட நீடித்து இருக்க முடியவில்லை.
Recommended Video
எடியூரப்பாவிற்கு சூரிய தசை நடந்த போது கடந்த 2007ஆம் ஆண்டு 7 நாட்கள் முதல்வரானார். அதன்பின்னர் 3 ஆண்டுகள் முதல்வரானார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு முதல்வரான எடியூரப்பா கர்நாடகா சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் மூன்றே நாட்களில் தனது முதல்வர் பதவியை மூன்றாவது முறையாக ராஜினாமா செய்தார்.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் முதல்வரான எடியூரப்பா 2 ஆண்டுகளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். வாழ்க்கை இன்பமும், துன்பமும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது என்பதுதான் சகடயோகம் உணர்த்தும் உண்மை. குருவுக்கு சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருந்தால், இந்த சகட யோகம் உருவாகிறது. இவர்களது வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் கலந்திருக்கும். எடியூரப்பா ஜாதகத்தில் குருவிற்கு 6வது வீடான விருச்சிகத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். இதுவே அவரது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் கொண்டாதாக அமைய காரணமாக உள்ளது.

பாஜக தலைவர் எடியூரப்பா
எடியூரப்பாவிற்கு கடந்த 1986ஆம் ஆண்டு சுக்கிர திசை தொடங்கியது. 1988ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் பாஜக தலைவரானார். கடந்த1999ஆம் ஆண்டு காங்கிரஸின் தரம்சிங் ஆட்சியை மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து கவிழ்த்த எடியூரப்பா, கூட்டணி ஆட்சி அமைத்தார். 20 மாதங்கள் குமாரசாமி ஆட்சியும், அடுத்த 20 மாதங்கள் எடியூரப்பா ஆட்சி செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

கூட்டணியில் விரிசல்
2006ஆம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் 2007 அக்டோபர் 8ஆம் தேதி வரை முதல்வராக இருந்த குமாரசாமி 20 மாதங்கள் முடிந்தவுடன் ஒப்பந்தப்படி முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்தார். இதனால் கூட்டணியில் விரிசல் விழுந்தது. பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டது. அதன்பின் இரு கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஆட்சி அமைத்தன.

3 ஆண்கள் பதவி விலகல்
2007 நவம்பர் 12ம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் முதல்வராக இருந்த எடியூரப்பா ஆட்சி குமாரசாமியால் கவிழ்க்கப்பட்டது. பின்னர் 2008 மே 30 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் முதல்வராக பதவியேற்றார். ஊழல் வழக்குகளை லோக் ஆயுக்தா பதிவு செய்த நிலையில் 2011 ஜூலை 31 ஆம் தேதி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார். 3 ஆண்டுகள் 62 நாட்கள் இவர் முதல்வர் பதவியில் இருந்தார். கைதாகி சிறை சென்றார். சட்டப்போராட்டம் நடத்தி ஊழல் புகாரில் இருந்து மீண்டு வந்தார்.

ராஜினாமா செய்த எடியூரப்பா
கடந்த 2018ஆம் ஆண்டு முதல்வரான எடியூரப்பா கர்நாடகா சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால் மூன்றே நாட்களில் தனது முதல்வர் பதவியை மூன்றாவது முறையாக ராஜினாமா செய்தார். அப்போதும் கண்ணீர் விட்டார் எடியூரப்பா.

ராஜயோக ஜாதகம்
வாழ்க்கையில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு திடீர் ராஜயோகங்கள் ஏற்படும், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டு அதன் மூலம் திடீர் கோடீஸ்வரர் ஆகி விடுவார். எடியூரப்பா ஜாதகத்தில் சந்திரன் விருச்சிகத்தில் அமர்ந்துள்ளார். தனுசு லக்னம்,செவ்வாய் அமர்ந்துள்ளார். மகரத்தில் புதன், கும்பத்தில் சூரியன் கேது, மீனத்தில் சந்திரன் உச்சம் பெற்று அமர்ந்துள்ளார். ரிஷபத்தில் சனி, மிதுனத்தில் வியாழன், சிம்மத்தில் ராகு அமர்ந்துள்ளனர். எடியூரப்பாவிற்கு எட்டாம் அதிபதியான சந்திரன் 12ஆம் வீட்டில் அமர்ந்துள்ளது விபரீத ராஜ யோகம்.

ஹம்ச யோகம்
எடியூரப்பா ஜாதகத்தில் ஹம்ச யோகம் அமைந்துள்ளது. அது போல மாளவியா யோகமும் அமைந்துள்ளது. ஹம்ச யோகம், மாளவியா யோகம் அமையப் பெற்றவர்களுக்கு சிறப்பான மண வாழ்க்கை அமைந்து தாம்பத்திய வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

சுக வாழ்வு
சூரியனுக்கு 12ல் புதன் இருந்தால் சுக போக வாழ்வு அமையும். சூரியனுக்கு இரண்டில் சுக்கிரன் இருந்தால் செல்வம் உள்ளவர்கள். சுக போக வாழ்வு அமையும். சூரியனுக்கு 2-12-ல் புதனும், சுக்கிரனும் இருக்க இவர்களை பாவக் கிரகங்கள் பார்க்கமால் இருந்தால் அந்த ஜாதகரின் தந்தை அதிக யோகத்தை அனுபவிப்பார்கள். சம்பத்தும், புகழும் பெற்று சிறப்புடன் வாழ்வர்கள். இது எடியூரப்பா ஜாதகத்தில் உள்ளது.

முதல்வர் பதவியில் 2 ஆண்டுகள்
கடந்த 2019ஆம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பாஜக ஆட்சி அமைத்தது. 2019, ஜூலை 26ஆம் தேதி நான்காவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் எடியூரப்பா. வயது மூப்பின் காரணமாக, இரண்டாண்டுகள் மட்டுமே பதவிவகிக்க வேண்டும் என பாஜக தலைமை அப்போது நிபந்தனை விதித்தது. இதனை ஏற்றுக்கொண்டார் எடியூரப்பா. இன்று 2021 ஜூலை 26ம் தேதியுடன் சரியாக இரண்டாண்டுகள் முடிவடைந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

நான்கு முறையும் ராஜினாமா
எடியூரப்பாவின் ஜாதகத்தில் உள்ள விபரீத ராஜயோகத்தின் படி அவர் நான்கு முறை கர்நாடகா மாநில முதல்வரானார் என்றாலும் சகடயோகம் மீண்டும் அவரை கீழே தள்ளி விட்டது. முதல்வர் பதவியை கண்ணீருடன் ராஜினாமா செய்துள்ளார். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்ட எடியூரப்பாவிற்கு தனது ஜாதகத்தை பற்றிய உண்மை தெரிந்ததன் காரணமாகவே முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.












Click it and Unblock the Notifications