பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் மங்களூர் குக்கர் வெடிப்புக்கும் தொடர்பில்லை.. சித்தராமையா புதிய தகவல்
பெங்களூர்: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்புக்கும் பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை என கர்நாடகா முதல்வர் சித்தராமையா விளக்கமளித்துள்ளார்.
பெங்களூர் குண்டனஹள்ளி பகுதியில் உள்ளது ராமேஸ்வரம் கஃபே. இங்கு நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் ஓடி போய் பார்த்த போது உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவத்தில் உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
குண்டுவெடிப்பா சிலிண்டர் வெடிப்பா: இந்தச் சம்பவத்தில் உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 9 பேர் காயமடைந்தனர். இது சிலிண்டர் வெடிப்பால் நிகழ்ந்திருக்கலாம் என சொல்லப்பட்டது. ஆனால் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்த போதுதான் அது குண்டுவெடிப்பு என தெரியவந்தது.
தேஜஸ்வி சூர்யா: இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. இந்த நிலையில் இது குறித்து பெங்களூர் தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் ராமேஸ்வரம் கஃபேவுக்கு போன் செய்து கேட்டேன். அப்போது வாடிக்கையாளர் விட்டு சென்ற கைப்பையில் இருந்துதான் ஏதோ வெடித்துள்ளது. சிலிண்டர் ஏதும் வெடிக்கவில்லை என்றார். இது ஏதோ குண்டுவெடிப்பு போல் உள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தெளிவான பதிலைத் தர வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா இந்த சம்பவம் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில் ராமேஸ்வரம் கஃபேயில் நிகழ்ந்தது குண்டுவெடிப்புதான், குறைந்த திறன் கொண்ட குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. வாடிக்கையாளரின் பையில் இருந்துதான் அந்த குண்டு வெடித்துள்ளது.
அரசியல் வேண்டாம்: சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இதை யார் வெடிக்கச் செய்தார்கள், எதற்காக வெடிக்கச் செய்தார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த குண்டுவெடிப்பு விஷயத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது. மங்களூரு குக்கர் குண்டுவெடிப்புக்கும் பெங்களூர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பில்லை. தனிப்பட்ட நபரின் வேலையா அல்லதுப ஒரு அமைப்பின் சதியா என விசாரணை நடத்தப்படுகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பு விஷயத்தில் விசாரணை குழு அறிக்கை வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்யவுள்ளேன். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: கடந்த 2022 நவம்பர் 19ஆம் தேதி முகமது ஷாரிக் (24) , மங்களூரில் ஆட்டோ ரிக்ஷாவில் குக்கரில் வெடிகுண்டை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவரது மடியில் வைத்திருந்த பையில் இருந்த குண்டு எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. இதில் 40 சதவீத தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குக் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பெங்களூர் வெடிகுண்டு சம்பவத்திலும் உணவகத்தில் ஒரு பையில் எடுத்து வந்த குண்டு வெடித்ததால் இங்கு மங்களூர் ஸ்டைல் இருப்பதால் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications