மதம், மதம் என்று போனால்.. கர்நாடக ஐடி துறைக்கே சிக்கல்.. பயோகான் கிரண் மஜும்தார் முக்கிய எச்சரிக்கை
பெங்களூர்: ‛‛தகவல் தொழில்நுட்பம் (IT)மற்றும் உயிரி தொழில்நுட்ப(BT) துறை வகுப்புவாதமாக மாறினால் அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும். இதனால் வளர்ந்து வரும் மதம் சார்ந்த் பிளவை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு, பெங்களூரில் செயல்படும் ஆசியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‛பயோகான்' நிறுவனத்தின் செயல் தலைவர் கிரண் மசூம்தார் ஷா கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடகத்தில் சமீப காலமாக மதம் சார்ந்த பிரச்சனைகள் எழுந்து வருகிறது. கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு விதித்த தடையை அம்மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

வியாபாரத்துக்கு தடை
இதன் தொடர்ச்சியாக உடுப்பி, தட்சிண கன்னடா, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் கோவில் திருவிழாக்களின்போது முஸ்லிம்கள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவில்கள் அருகே பேனர்கள் வைக்கப்பட்டன. அதில் இந்து மதம் அல்லாதவர்கள் கடை ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து ஹலால் உணவு தொடர்பான பிரச்சனை தற்போது எழுந்துள்ளது.

பயோகான் செயல் தலைவர் கண்டனம்
இந்நிலையில் தான் பயோகான் நிறுவனத்தின் செயல் தலைவர் கிரண் மசூம்தார் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மதபிளவு தொடர்பான பிரச்சனையை தீர்க்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 2 பதிவுகள் செய்துள்ளார்.

தலைமையை அழித்துவிடும்
முதல் பதிவில் ‛‛ கர்நாடகா எப்போதும் அனைத்து மக்களின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் இத்தகைய வகுப்புவாத ஒதுக்கீட்டை நாம் அனுமதிக்கக்கூடாது. தகவல் தொழில்நுட்பம் (IT)மற்றும் உயிரி தொழில்நுட்ப(BT) துறை வகுப்புவாதமாக மாறினால் அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும். இதனால் வளர்ந்து வரும் மதம் சார்ந்த் பிளவை தீர்க்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வருக்கு கோரிக்கை
இந்த பதிவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை டேக் செய்துள்ளார். மேலும் அடுத்த டுவிட்டர் பதிவில், "நமது முதல்வர் மிகவும் முற்போக்கான தலைவர். அவர் விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பார்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பயோகான் என்பது ஆசியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஒன்றாகும். இதன் செயல் தலைவராக தான் கிரண் மசூம்தார் ஷா இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications