ஓசூர் அருகே அரசு பஸ் கண்டக்டருக்கு வந்த வில்லங்க ஆசை.. கவுண்டமணி ஸ்டைலில் பயணிகளிடம் செய்த காரியம்!
பெங்களூர்: பெங்களூரில் இருந்து தமிழகத்தின் தேன்கனிக்கோட்டைக்கு வந்து கொண்டிந்த தமிழக அரசு பஸ்சில், கண்டக்டர் பயணிகளிடம் வசூல் செய்த பணத்துடன் தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. டிக்கெட் வழங்கும் எந்திரம் பழுதாகிவிட்டதாக கூறி, பஸ்சில் இருந்து பயணிகளிடம் பணத்தை மட்டும் வசூல் செய்துவிட்டு டிக்கெட் கொடுக்காமல் இருந்துள்ளார். பஸ் ஓசூர் வந்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
நடிகர் கவுண்டமணி பாணியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. நடிகர் கார்த்திக் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் கார்த்திக்கிடம் டிக்கெட் எடுக்க பணம் வாங்கிவிட்டு டிக்கெட் கொடுக்காமல் பஸ்சில் இறந்து ஓடி விடுவார். அதே பாணியில் நேற்று பெங்களூரில் இருந்து தமிழகம் வந்த அரசு பஸ்சில் இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக தமிழக அரசு பஸ் ஒன்று தேன்கனிக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில மொத்தம் 40 பயணிகள் இருந்துள்ளனர். பஸ் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் கண்டக்டர் டிக்கெட் எடுக்க தொடங்கினார். பயணிகளிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட அவர் அதற்கான டிக்கெட்டை கொடுக்கவில்லை.
டிக்கெட் எங்கே என பயணிகள் கேட்டதற்கு எந்திரம் பழுதாகிவிட்டது என்று சொல்லி அனைத்து பயணிகளிடமும் பணத்தை மட்டும் வாங்கி கொண்டுவிட்டு டிக்கெட் கொடுக்காமல் இருந்துள்ளார். பஸ்சில் உள்ள பயணிகளும் ஏன் கிழித்து கொடுக்கும் பேப்பர் டிக்கெட் இருக்குமே அதையாவது கொடுக்கலாமே என்று சொல்லியிருக்கின்றனர்.
ஆனால் பஸ் கண்டக்டரோ ஏதேதோ சொல்லி டிக்கெட் கொடுக்கவில்லை. இதனால் ஒருசில பயணிகளுக்கு பஸ் கண்டக்டர் மீது சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே பஸ் ஓசூர் பேருந்து நிலையம் வந்தது. அப்போது ஒரு பயணி டிக்கெட் வழங்காதது குறித்து அங்குள்ள கண்காணிப்பு அலுவலரிடம் தெரிவித்தார். உடனே அவர் கண்டக்டரை அழைத்து ஏன் டிக்கெட் கொடுக்கவில்லை.
எந்திரம் பழுது என்றால், கிழித்து கொடுக்கும் பேப்பர் டிக்கெட்டை கொடுத்திருக்கலாமே என்று கேள்வி கேட்டிருக்கிறார். இந்த விசாரணைக்கு பிறகு, திடீரென கண்டக்டரை காணவில்லை. டிக்கெட் எந்திரம், பயணிகளிடம் வசூலித்த பணம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது. நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் கண்காணிப்பு அலுவலர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார்.
அங்கு யாரும் காணாமல் போனால், ரத்த சம்பந்த உறவுகள் தான் புகார் தர முடியும். உங்கள் புகாரை ஏற்க முடியாது என்று போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன்பின்னர், திடீரென பணத்துடன் தலைமறைவான கண்டக்டர் மீது போக்குவரத்து அலுவலர்கள் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்தனர். பயணிகளிடம் வசூல் செய்த பணத்துடன் பஸ் கண்டக்டர் தப்பி ஓடிய சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications